மனித உரிமை ஆணைய விசாரணையில் அம்பலம்: கை, கால்களை உடைத்து 326 பேரை சிறையில் அடைத்த போலீசார்: உரிய சிகிச்சை அளிக்க உத்தரவு

சென்னை: தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் ஜோதிகா கல்ரா நேற்று சென்னை வந்தார். மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆணையத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான பாஸ்கரன், உறுப்பினர்கள் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், சித்தரஞ்சன் மோகன்தாஸ் ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநில மனித உரிமை ஆணையத்தில் பெறப்பட்ட மனுக்கள், தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஜோதிகா கல்ரா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை போலீசார் கண்மூடித்தனமாக தாக்குவதாகவும், இதன் காரணமாக 326 பேர் கை, கால் எலும்பு முறிவுற்ற நிலையில் உரிய சிகிச்சையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் வந்த புகாரை மனித உரிமை ஆணையத்தின் முழு அமர்வு விசாரித்தது. இதுதொடர்பாக விசாரிக்க குழு அமைத்து முழு அமர்வு உத்தரவிட்டது.

அதன்படி விசாரணை நடத்திய குழு போலீசார் தாக்குதலில் பலர் கை, கால் எலும்பு முறிவுற்ற நிலையில் சிறையில் இருந்ததை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. மனித உரிமை ஆணையம் முன்பை விட வேகமாக செயல்படுகிறது. இணையதளம் வழியாக புகாரை அளிக்கும் வசதி உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது புகாரை நேரடியாக அளிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. இணையதளம் வழியாகவும் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: