காவல் துறையில் தொடரும் சம்பவங்கள்.....தென் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது பெண் இன்ஸ்பெக்டர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு: உள்துறை செயலாளர், டிஜிபியிடம் புகார்

சென்னை: தென் மாவட்டத்தில் பணியாற்றும் எஸ்பி ஒருவர் மீது பெண் இன்ஸ்பெக்டர் உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியிடம் பரபரப்பாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழக காவல் துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையானது என்று ஒப்பிட்டு பேசுவது வழக்கம். ஆனால் அண்மைக்காலமாக காவல் துறையில் பதவியேற்கும்போது எடுக்கப்படும் பதவி பிரமாணத்துக்கு எதிரான செயல்களில் சில உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரை, கன்னியாகுமரி என தென் மாவட்டங்களில் பணியாற்றி வரும் எஸ்பி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர் பதவிக்கு வரும் போது காவல் துறையில் நேர்மையான அதிகாரி என்று பலரால் பாராட்டு பெற்றவர். தென் மாவட்ட வக்கீல் ஒருவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டது. அந்த நட்பால் எஸ்பி தனது நேர்மையான பாதையில் இருந்து விலகி சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

ஒவ்வொரு வார இறுதி நாட்களில் எஸ்பி தனது நண்பருடன் பண்ணை வீடுகள் மற்றும் ரிசாட்டுகளில் மது விருந்துகளுடன் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மது விருந்து கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் எஸ்.பி. ஒரு படி மேலே சென்று மது விருந்து முடிந்த உடன் சகல விதமான விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார். மது மற்றும் மாதுவுக்கு அடிமையான அந்த எஸ்.பி. ஒரு மாதத்தில் 15 நாட்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியாக இருந்து வருகிறாராம், நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்து அவர் பெண்கள் விஷயத்தில் படு வீக்கானதை  அவருக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகள் வெளியில் சொல்ல முடியாமல் புலம்பி வருகிறார்களாம்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக எஸ்.பி.க்கு கீழ் வேலை செய்து வந்த இளம் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரை பல வகையில் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இது பிடிக்காத அந்த பெண் இன்ஸ்பெக்டர் எஸ்.பிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எஸ்.பி. தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஐஜியிடம் ெபண் இன்ஸ்பெக்டர் குறித்து புகார் அளித்து பக்கத்து மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்துள்ளார்.

ஆனால் அந்த பெண் இன்ஸ்பெக்டர் புதிய இடத்திற்கு செல்லாமல் மருத்துவ விடுப்பு எடுத்து கொண்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். பணிக்கு செல்லாத பெண் இன்ஸ்பெக்டருக்கு எஸ்.பி பல வகையில் தொந்தரவு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பெண் இன்ஸ்பெக்டர் உள்துறை செயலாளர் பிரபாகர் மற்றும் தமிழக காவல் துறை இயக்குநர் திரிபாதியிடம் 10 பக்கங்கள் கொண்ட நீண்ட புகாரை நேரில் அளித்துள்ளார்.

இந்த புகாரில் பெண் இன்ஸ்பெக்டர் கூறியிருப்பதாவது: ”எனக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணமானது. அப்போது நான் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தேன். எனது கணவர் மாவட்ட எஸ்.பி.க்கு ‘கன்ேமனாக’ பணிபுரிந்து வந்தார். ஒரே இடத்தில் நாங்கள் பணியாற்றி வந்தோம். அப்போது எஸ்.பியாக இருந்த அதிகாரி உள்நோக்கத்தோடு என்னை பணியிடமாற்றம் செய்தார். என்னை நேரில் அழைத்து ஆசைக்கு இணங்க பல வகையில் முயற்சி செய்தார். அதற்கு நான் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் என்னை பழிவாங்க வேண்டும் என்று பல வகையில் துறைரீதியாக நடவடிக்கைகளை எடுத்தார்.

பின்னர் பதவி உயர்வு மூலம் நான் கூடங்குளம் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பதவி ஏற்றுக்கொண்டேன். அப்போதும் எஸ்பி என்னை விடாமல் பழி வாங்கினார். எஸ்.பி.யின் ஆசைக்கு இணங்குமாறு என்னை நேரில் அழைத்து கேட்பார். இதனால் எனது நிம்மதி போச்சு. எனது கணவரும் என் மீது சந்தேகம் அடைந்து என்னையும் 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு சென்று விட்டார். உயர் அதிகாரியின் ஆசைக்கு இணங்கினால் தான் காவல் துறையில் தண்டனைகள் இல்லாமலும், பிரச்சனைகள் இல்லாமலும் பணி செய்ய முடியுமா. இதற்கு மேலும் காவல் துறையில் தொடர்ந்து பணி செய்ய எனக்கு விருப்பமில்லை. ஒரு திறமையான பெண் காவல் அதிகாரியை தமிழக காவல் துறை இழந்துவிட்டது என்று தான் நான் கருதுகிறேன்.

இதற்கு மேல் எனக்கு உயிர் வாழ விருப்பமுமில்லை. எனக்கும் என் குழந்தைகளுக்கும் ஏதாவது நேரலாம் ஆனால் எங்கள் சாவுக்கு முழுக்க முழுக்க எஸ்.பி. மட்டும் தான் காரணம். காணாமல் போன எனது கணவரை கண்டுபிடித்து என்னை அவருடன் சேர்த்து வைக்க வேண்டும். எனது குடும்பத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி எனது எதிர்காலத்தை பாழாக்கி அதிகார துஷ்பிரயோகம் செய்த எஸ்பி மீது சட்டப்படியான மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார். தென் மாவட்டத்தில் பணியாற்றும் எஸ்.பி.மீது பெண் இன்ஸ்பெக்டர் பாலியல் புகார் கொடுத்துள்ளது போலீஸ் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே காவல்துறை ஐஜி ஒருவர் மீது பெண் எஸ்.பி. ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். ஆனால் பெண் எஸ்.பி. குற்றச்சாட்டுக்கு தமிழக காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் இது தொடர்பான வழக்கை நீதிமன்றம் உத்தரவுப்படி ஐதராபாத்திற்கு மாற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு எஸ்.பி. மீது பெண் இன்ஸ்பெக்டர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது தமிழக காவல் துறையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: