ஊழியர்களுக்கு கொரோனா தொற்று காரணங்களை காட்டி மத்திய அரசு அலுவலகங்களை மூடி ‘சீல்’ வைக்க தடை: வேலை நாட்களில் கட்டாயம் பணிக்கு வர உத்தரவு

புதுடெல்லி: ஊழியர்களுக்கு கொரோனா தொற்று காரணங்களை காட்டி மத்திய அரசு அலுவலகங்களை இனிமேல் மூடி ‘சீல்’ வைக்கக் கூடாது என்றும், வேலை நாட்களில் ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் மத்திய பணியாளர் நலத்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்தாலும் கூட, சில கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளன. மத்திய, மாநில அரசு அலுவலகங்களை பொருத்தமட்டில் அனைத்து  அதிகாரிகள், ஊழியர்கள் சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களால் நிர்ணயிக்கப்பட்ட நேர  அட்டவணையைப் பின்பற்றி பணிக்கு வந்து செல்கின்றனர். இருப்பினும், துணை செயலாளர் மட்டத்திற்கு கீழ் உள்ள ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பதவிக்கு வருகின்றனர்.

மற்றவர்கள் வெவ்வேறு  நாட்களில் பணிக்கு அழைக்கப்பட்டனர். முடிந்தவரை  வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டங்களை நடத்தவும், வீட்டிலிருந்து பணிபுரியவும், தொலைபேசி மற்றும் மின்னணு தகவல்தொடர்பு மூலம் பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய அரசு அலுவலகம் அல்லது பணியிடங்களில் தொற்று பரவல் இல்லையென்றால் முழுமையாக செயல்படும். அதனால், அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் வேலை நாட்களில் அலுவலகத்தில் பணியில் இருக்க வேண்டும்.

ஊழியர்களுக்கு தொற்று பரவல் காரணங்களை காட்டி இனிமேல், மத்திய அரசு அலுவலகங்களை மூடி ‘சீல்’ வைக்க கூடாது. அலுவலகத்தில் ஒன்று அல்லது இரண்டு ஊழியர்களுக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் பயன்படுத்திய அறைகளை வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்றி தூய்மைப்படுத்த வேண்டும். அடுத்த 48 மணி நேரத்திற்கு பின், அந்த அலுவலகம் அல்லது அறை வழக்கம் போல் செயல்பட வேண்டும். குறிப்பாக அலுவலகங்கள் ஊழியர்கள் பணியாற்றும் இடங்கள், படிக்கட்டுகள், லிப்ட், வாகனம் நிறுத்துமிடங்கள், கேன்டீன்கள், அதிகாரிகள் சந்திப்பு அறைகள், கூட்டரங்குகள் ஆகியவற்றின் மூலம் தொற்று பரவ வாய்ப்புள்ளதால், சரியான நேரத்தில் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும். அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் முடிந்தவரை, இரண்டு கெஜம் அல்லது ஆறு அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அவ்வப்போது குறைந்தது 20 முதல் 40 வினாடிகள் வரை கைகளைக் கழுவ வேண்டும். பணியிடங்களில் சானிடைசர் கட்டாயம் பயன்படுத்த ேவண்டும். அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்பு அனைவரையும் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அலுவலகத்திற்கு வெளியே ஒரு துப்புரவாளர் பணியில் இருக்க வேண்டும். அறிகுறிகள் இல்லாத ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மட்டுமே நுழைய அனுமதிக்க வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றினாலும் கூட, எவருக்காவது தொற்று அறிகுறி இருந்தால் அவரை தனிமைப்படுத்த வேண்டும். சுகாதாரத் துறையின் பரிந்துரையின் பேரில் அவருக்கு இலவச மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். எனவே, அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் வார நாட்களில் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும்.

டெல்லி உட்பட நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கட்டுப்பாட்டு மண்டலத்தில் வசிக்கும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இந்த புதிய வாழிகாட்டுதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: