இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட பாஜ, என்ஆர் காங். முடிவு: கலக்கத்தில் புதுச்சேரி அதிமுக

புதுச்சேரி: தமிழகத்தில் அதிமுக, பாஜக ஒரே அணியாக களமிறங்க முடிவெடுத்து விட்டன. தேஜ கூட்டணியில் பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்க்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆனால் புதுச்சேரியில் பிரதான எதிர்க்கட்சியான என்ஆர் காங்கிரஸ் தலைமையில் தேர்தலை சந்திக்க ரங்கசாமி தயாராகி வருகிறார். அவரிடம் பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் என்ஆர் காங்கிரஸ், பாஜகவுக்கான தொகுதிகள் தொடர்பாக மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கின்றன. ரங்கசாமி 20 தொகுதிகள் வரை தனது கட்சியை களமிறக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.

அதன்பிறகு மீதம் 10 தொகுதிகள் மட்டுமே உள்ளன. புதுவையில் எப்படியாவது தங்கள் கட்சியை வளர்க்க வேண்டுமென பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அவ்வப்போது புதுச்சேரி  வந்து செல்கின்றனர். வரும் தேர்தலில் பாஜகவும் இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு வருகிறது. இதன் காரணமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கின்றன.இதுஒருபுறமிருக்க இதே கூட்டணியில் மற்றொரு பிரதான கட்சியான அதிமுகவும் அங்கம் வகிக்கிறது. வரும் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அதிமுகவினர் விரும்புகின்றனர்.

ஆனால் பாஜகவும், என்ஆர் காங்கிரசும் தன்னிச்சையாக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கான இடங்களை எடுத்துக்கொண்டு மீதமுள்ளவை இவ்வளவுதான் என கடைசியாக தங்களுக்கு மிக குறைந்த தொகுதிகளை ஒதுக்கி கட்சித் தலைமையை சம்மதிக்க வைத்து விடுவார்களோ? என்ற கலக்கம் தற்போது புதுச்சேரி அதிமுக நிர்வாகிகளிடம் நிலவுகிறது. இக்கூட்டணியில் பாமகவும் இடம்பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு எத்தனை தொகுதி கிடைக்கும் என்பதற்கும் இதுவரை விடையில்லை.

Related Stories: