25 ஆண்டுகால மக்கள் பணி நிறைவு: அமைச்சர் பதவியை தொடர்ந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் மல்லாடி கிருஷ்ணாராவ்.!!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதி எம்எல்ஏவாக 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ், தான் பொறுப்பு வகித்து வந்த சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை கடந்த சில நாட்களுக்கு  முன் ராஜினாமா செய்தார். முன்னதாக 25 ஆண்டுகாலம் மல்லாடியின் மக்கள் பணியை பாராட்டி சட்டசபை செயலகம் சார்பில் ஏனாமில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மல்லாடி, வரும் தேர்தலில் போட்டியிட  போவதில்லை, எனது குடும்பத்தை சேர்ந்தவர்களும் அரசியலுக்கு வர மாட்டார்கள். திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பதாக தெரிவித்தார். மல்லாடியின் இந்த முடிவு, அவரது  ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

தொடர்ந்து, ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய மல்லாடி, நான் எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன். ஒரு நாளைக்கு மூன்றரை மணி நேரம் தான் தூங்குகிறேன். எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. என்னை புரிந்து கொண்டு  நம்மில் இருந்து ஒருவரை தேர்வு செய்து புதுச்சேரி சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். யார்? அவர் என்பதை நீங்களே சொல்ல வேண்டும். ஏனாம் வளர்ச்சிக்கு யார்? உறுதுணையாக இருப்பார் என்பதை அறிந்து சொல்லுங்கள். நான் இங்கே தான்  இருப்பேன். எங்கும் செல்லப்போவதில்லை என்றார்.

இந்நிலையில், ஏனாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்து புதுச்சேரி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால், மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா கடிதம் தனக்கு வந்து  சேரவில்லை என  சபாநாயகர் சிவகொழுந்து விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் பதவி ராஜினாமா ஏற்கப்படாத நிலையில், எம்எல்ஏ பதவியையும் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: