மைதானத்தை அதிர வைத்த அஸ்வின்: 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு 482 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா.!!!

சென்னை: 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 482 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன் எடுத்திருந்தது. ரோகித் 161, புஜாரா 21, ரகானே 67 ரன் எடுத்தனர். பன்ட் 33, அக்சர் 5 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் இஷாந்த் வேகத்தில் எல்பிடபுள்யு ஆகி வெளியேற, இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. தொடர்ந்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 134 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (59.5 ஓவர்). அடுத்து 195 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன் எடுத்தது. கை வசம் 9 விக்கெட் இருக்க, இந்தியா 249 ரன் முன்னிலையில், 3வது நாள் ஆட்டம் தொடங்கியது.

இதில், இந்திய அணி 85.5 ஓவர்களில் 286 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தது. அதிகபபட்சமாக அஸ்வின் 106 ரன்களும், கேப்டன் விராட் கோலி 62 ரன்களையும் எடுத்துள்ளனர். இதன் மூலம் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 482 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்தின் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெறும். முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: