அரசை விமர்சிப்பவர்களைக் கொடுங்கோல் வழிகளில் அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது.: மாணவி திஷா ரவி கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட பெங்களூரு மாணவி திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதத்திற்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு வெளிநாடுகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி என்ற மாணவி, சில நாட்களுக்கு முன் கிரெட்டா தன்பர்க்கின் வாசகங்களை ஒரு போராட்ட குழு சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பெங்களூரு வந்த டெல்லி போலீசார் வன்முறையை தூண்டி விடுவதாக அவரை கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, திஷா ரவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில் அவரை கைது செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் தங்களுது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதாவது, அற்பமான குற்றச்சாட்டுகளைப் புனைந்து திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசை விமர்சிப்பவர்களைக் கொடுங்கோல் வழிகளில் அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது. மேலும் இத்தகைய தண்டிக்கும் போக்கைத் தவிர்த்து, இளைஞர்களிடம் இருந்து எழும் எதிர்ப்புக் குரல்களுக்குச் செவிமடுக்கவேண்டும் என்று பா.ஜ.க. அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தனது கண்டனத்தை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: