பனிப்பொழிவால் மகசூல் இழப்பை தவிர்க்க தேயிலை செடிகளை கவாத்து செய்யும் விவசாயிகள்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உறை பனி நிலவி வருவதால் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இதனால் ஏற்படும் மகசூல் இழப்பை தவிர்க்கும் வகையில், விவசாயிகள் அவற்றை கவாத்து செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் தாமதமாக கடந்த மாத இறுதியில் உறைபனிப்பொழிவு துவங்கியது.

துவக்கத்தில் தாக்கம் குறைவாக இருந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் உறைபனிப்பொழிவு நிலவி வருகிறது. ஊட்டியில் 0 டிகிரி, 1 டிகிரிக்கு வரை வெப்பநிைல நிலவி வரும் நிலையில், கோரக்குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 4க்கு சென்றது.

உறைபனி பொழிவு காரணமாக தாவரவியல் பூங்கா, குதிரைபந்தய மைதானம், தலைகுந்தா, சூட்டிங் மட்டம் போன்ற பகுதிகளில் உள்ள புல் மைதானங்களில் உறைபனி கொட்டி வருகிறது. உறைபனி பொழிவு காரணமாக புற்கள், செடி கொடிகள் கருகி வருகின்றன.

சோலூர், கோக்கால், நுந்தளா, நடுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள தேயிலை செடிகள் கருக துவங்கியுள்ளன.

உறைபனிப் பொழிவு தீவிரமாக இருப்பதால், தேயிலை செடிகள் கருகும் சூழல் உள்ளதால், பெரும்பாலான தேயிலை விவசாயிகள் செடிகளை கவாத்து செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஊட்டி அருகே வேலிவியூ, மஞ்சூர், பெங்கால்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகளை கவாத்து செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பனிகாரணமாக தேயிலை வளர்ச்சி தடைபட்டு மகசூல் வெகுவாக பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், குளிரும் அதிகமாக காணப்படுகிறது.

ஊட்டி, பைக்காரா, தலைகுந்தா, சாண்டிநல்லா போன்ற பகுதிகளில் பனிக்காற்று வீசி வருகிறது. பகல் நேரத்தில் வெயில் அடித்த போதிலும் பனிக்காற்று வீசுவதால் குளிர் காணப்படுகிறது. தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

Related Stories: