காதலர் தின கொண்டாட்டம் குரும்பப்பட்டி பூங்காவில் காதல் ஜோடிகள் ‘மிஸ்சிங்’-மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்

சேலம் : சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் நேற்று காதலர் தினத்தில், காதல் ஜோடிகள் வருகை இல்லை. மாறாக குழந்தைகளுடன் பெற்றோர் திரண்டு வந்திருந்தனர். உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதல் ஜோடியினர், பரிசு பொருட்கள் வழங்கியும், ரோஜா பூக்களை கொடுத்தும் அன்பை பரிமாறிக் கொண்டனர். சேலத்தில் காதலர் தினத்தன்று வழக்கமாக பூங்கா, திரையரங்குகளில் காதல் ஜோடியினரின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று பூங்கா, இதர பகுதிகளில் காதல் ஜோடியினரை பெரிய அளவில் பார்க்க முடியவில்லை. தியேட்டர்களுக்கு மட்டும் சிலர், ஜோடியாக வந்திருந்தனர்.

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை பொருத்தளவில் காதலர் தினத்தன்று அதிகமாக காதல் ஜோடியினர் வருவது வழக்கம். ஆனால் நேற்று, காதல் ஜோடிகளே பூங்காவிற்கு வரவில்லை. அதேநேரத்தில், விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் பூங்காவிற்கு வந்திருந்தனர். அவர்கள் புள்ளிமான், கடமான், முதலை, குரங்கு, வண்ணப்பறவைகள், வெள்ளை மயில் உள்ளிட்டவைகளை கண்டு ரசித்தனர்.

பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு சாதனங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். 3டி படகு வரைப்படத்தில் நின்றுக் கொண்டு பலரும் செல்போன்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். திருமணமான இளம்ஜோடியினர் சிலரும் வந்திருந்தனர். அவர்கள், இயற்கையோடு செல்போனில் படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “பூங்காவிற்கு காதல் ஜோடிகள் வருகை இல்லை. ஆனால், குழந்தைகளுடன் பலர் வந்திருந்தனர். ஒட்டுமொத்தமாக 2,700 பேர் வந்துள்ளார்கள். அவர்களிடம் இருந்து கட்டணமாக ₹69 ஆயிரம் வசூலாகியுள்ளது,’’ என்றனர்.

Related Stories: