வெற்றி நடை போடும் தமிழகம் என விளம்பரம் கொடுக்கிறார் முதல்வர்; இது வெற்றி நடை அல்ல, வெற்று நடை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

புதுக்கோட்டை: வெற்றி நடை போடும் தமிழகம் என விளம்பரம் கொடுக்கிறார் முதல்வர்; இது வெற்றி நடை அல்ல, வெற்று நடை என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதற்கான தேதியை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இந்நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைவரும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தரப்பில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஊனையூரில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பின்னர் பேசினார். அப்போது பேசிய அவர்; கடன் வாங்கி அதிமுக ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து வருகின்றனர். தமிழகம் ரூ.5 லட்சம் கோடி கடனில் மூழ்கி உள்ளது. குடிமராமத்து பணிகள் என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றனர்; மண்ணை அள்ளுவது போல் பணத்தை அள்ளுகின்றனர். 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது.

சொன்ன திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக முதல்வர் பழனிசாமி பொய் சொல்லி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆசிரியர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று விட்டு 7 ஆண்டுகளாக ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். இதயமற்ற முறையில் தமிழக அரசு ஆசிரியர்களுக்கான வயது வரம்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெற்றி நடை போடும் தமிழகம் என விளம்பரம் கொடுக்கிறார் முதல்வர்; இது வெற்றி நடை அல்ல; வெற்று நடை என விமர்சனம் செய்தார். வளமான ஆட்சிதான்; ஆனால் அது மக்களுக்கு அல்ல; அதிமுகவினருக்கு மட்டுமே வளமான ஆட்சி.

அதிமுக ஆட்சியில் புதிய முதலீடுகள் எதுவும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் குறைகளை தீர்க்க தனித்துறை உருவாக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 1 கோடி மக்களின் குறைகள் தீர்க்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

Related Stories: