வேலூர் கோட்டையில் காதலர் தினம் கொண்டாட வந்த இளம்ஜோடிகளை திருப்பி அனுப்பிய போலீசார்

வேலூர் : ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாட்டம் உலகம் முழுவதும் களைக்கட்டுகிறது. இத்தினத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா மலர்களை பரிமாறிக் கொண்டும், பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டும் காதலர் தினத்தை கொண்டாடுகின்றனர். வேலூர் கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஜோடிகள் அதிகளவில் வருவர்.

இதற்கு பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்து முன்னணி உட்பட இந்து இயக்கங்கள் இவ்வாறு ஜோடியாக கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு வரும் காதல் ஜோடிகளை மறித்து திருமணம் செய்து வைப்போம் என்று அறிவித்து அங்கு திரளுகின்றனர். இதனால் கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

நேற்றும் காலையிலேயே வேலூர் கோட்டையில் போலீசார் பாதுகாப்புக்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் கோட்டைக்கு காதலர் தினத்துக்காக வந்த இளம் ஜோடிகளை வழிமறித்து திருப்பி அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் தோட்டப்பாளைத்தில் வாழ்த்து அட்டையை எரித்து இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Related Stories: