தேர்தல் வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக: திருமண விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

கோவை: தேர்தல் வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வரும் 24ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கோவை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் ஏழை பெண்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோவை பச்சாபாளையத்தில் இன்று 123 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

பின்னர் திருமண விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி; ஜெயலலிதா பிறந்தநாள், ஏழை மக்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய நாள். மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா. 1981-ம் ஆண்டு முதல் இலவச திருமணங்களை அதிமுக நடத்தி வருகிறது. சீர் வரிசை கொடுத்து திருமணம் நடத்தி வைக்கும் ஒரே கட்சி அதிமுக. தேர்தல் வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக.  மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் 6,085 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவி மூலம் 11,86,215 பேர் பயன் அடைந்துள்ளனர். 2.98 லட்சம் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளது. மகப்பேறில் 2030-ல் அடைய வேண்டிய இலக்கை தற்போது அடைந்துள்ளோம். 434 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தியது அதிமுக அரசு. சிறு, குறு தொழில்கள் உயர்வடைய வங்கிக் கடன் உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் எல்லா வளமும் இறைவன் மூலம் கிடைக்கும் என அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்; ஏழைகளுக்கு உதவி, தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது அதிமுக மட்டும்தான்; பாஜக, அதிமுக கூட்டணி தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கியுள்ளது. ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதல்வர் பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார் என கூறினார்.

Related Stories: