டீசல் விலை உயர்வால் கடன் வாங்கி விவசாயம் செய்கிறோம்: பழனிசாமி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர்

பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு முறை ஏறும்போதும் விவசாயிகள் தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். முன்பெல்லாம் ஒரு ஏக்கருக்கு வாகன வாடகை ரூ.1,500 ஆக இருந்தது. ஆனால், தற்போது அது ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டு விட்டது. சில நேரங்களில் ரூ.3,500 வரையில் வாடகை வாங்கப்படுகிறது. இதேபோல், கடந்த 20 வருடமாக இலவச மின்சாரம் கொடுக்கவில்லை. இதனால், டீசல் பம்ப் செட் பயன்பாடு குறைந்துவிட்டது. டீசல் வாங்கி பயன்படுத்தினால் அதற்கேற்ற விலை கிடைப்பதில்லை. முன்புபோல் இப்போது விவசாயம் இல்லை. விளைவிக்கும் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுசெல்லும் போது ரூ.500 ஆக இருந்த வாடகை ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான் இதற்கு முழு காரணமாக உள்ளது. ஆட்டோ, டாக்சி போன்றவற்றிலும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இதை பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துவிட்டது.

ஒரு ஏக்கருக்கு ரூ.3,500 முதல் ரூ.4,000 ஆயிரம் வரையில் நெல் அறுவடை செய்ய கேட்கிறார்கள். வருகின்ற பணத்தில் இயந்திர வாடகைக்கே கொடுத்துவிட்டால் விவசாயிகளின் கைகளில் ஏதும் இருக்காது. சில நேரங்களில் நஷ்டத்தை தான் சந்திக்கிறோம். விவசாயிகளுக்கு மட்டும் இல்லை வாடிக்கையாளர்களும் இந்த விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் விளைவிக்கும் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுசெல்லும் போது கூடுதலாக பணம் செலவாகிறது. இதனால், கடன் வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆயிரம் ரூபாய்க்கு குறைந்து வாடகைக்கு எந்த வாகனங்களும் வருவதில்லை. விவசாயிகளுக்கு லாபம் வராமல் நஷ்டமே வருகிறது.

நெல் கடைகளுக்கு கொண்டுசெல்லும் போது ஒரு கிலோ 10 ரூபாய்க்கு தான் எடுத்துக்கொள்கிறார்கள். கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவிற்கு விவசாயம் செய்யமுடியவில்லை. இதனால், விளைச்சலும் இல்லை. எனவே, கிடைத்த பொருட்களை கொண்டுபோய் கடைகளில் கொடுத்தால் அதற்கு சரியான விலையும் கிடைக்கவில்லை. 5 ஆயிரம் ரூபாய் கிடைத்தால் அதில் 2 ஆயிரம் ரூபாய் வாகன வாடகைக்கே சென்றுவிடுகிறது. கமிஷன் என்று ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொள்வார்கள். கடைசியில் ஆயிரம் ரூபாய் கூட விவசாயிக்கு லாபம் கிடைக்காது.

தான் எதிர்பார்த்த அளவுக்கு மிகவும் குறைவாக விளைந்த காய்கறிகள், பழங்களை ஏற்றிச் சென்றாலும், வாகனத்தின் கொள்ளவுக்கு ஏற்றிச் சென்றாலும் ஒரே வகை வாடகையை தான் வாகன உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டி இருக்கிறது. அளவு குறைவாக இருக்கிறது என்பதற்காக அவர்கள் வாடகையை குறைக்க மாட்டார்கள். இதுபோன்ற சூழலில் காய்கறிகளை, பூக்களை அப்படியே செடிகளில் விட்டுவிடுகிறோம். காரணம் அதை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால் லாபம் கிடைக்காது, செலவு செய்த பணமும் கிடைக்காது. வண்டிக்கான வாடகையை கடன் வாங்கித் தர வேண்டும்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கு வரியை குறைத்தாலே போதும் அடிப்படை பொருட்களின் விலையும் குறைந்துவிடும். கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கிவிட்டு இவர்கள் அத்தியாவசிய பொருட்களின் மீது வரியை ஏற்றிவிடுகிறார்கள். பெரு நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பதை அரசு கைவிட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு ரூ.3,500 முதல் ரூ.4,000 ஆயிரம் வரையில் நெல் அறுவடை செய்ய கேட்கிறார்கள். வருகின்ற பணத்தில் இயந்திர வாடகைக்கே கொடுத்துவிட்டால் விவசாயிகளின் கைகளில் ஏதும் இருக்காது. சில நேரங்களில் நஷ்டத்தை தான் சந்திக்கிறோம். விவசாயிகளுக்கு மட்டும் இல்லை வாடிக்கையாளர்களும் இந்த விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும்: ஜேம்ஸ், கோவை மாவட்ட தலைவர், தமிழ்நாடு  கைத்தொழில்  மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம்

மத்திய அரசு தற்போது மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளாலும் தொழிற்துறைக்கு அடிமேல் அடி விழுந்துகொண்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தற்போது தான் நாடு தன்னுடைய இயல்பு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தசூழலில், எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பல்வேறு மூலப்பொருட்களின் விலை 40 முதல் 200 சதவீதம் வரை ஏற்றப்பட்டுள்ளது. இந்த பிரச்னை பெரும் பிரச்னையாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறார்கள்.

 தொழில்களை பொருத்தவரையில் ஒரே இடத்தில் எப்போதும் மூலப்பொருட்கள் கிடைக்காது. பல்வேறு மாநிலங்களில் இருந்து மூலப்பொருட்களை வாங்கி அதை கொண்டுவர வேண்டும். தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வதன் மூலம் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. சிறு, குறு தொழில்நிறுவனங்கள் இதனால் லாபகரமாக இயங்க முடியுமா என்பதில் பெரும் கேள்வி எழுந்துள்ளது. முன்பெல்லாம் பெங்களூரில் இருந்து ரூ.2 ஆயிரம் இருந்தாலே போதும் கோவைக்கு மூலப்பொருட்களை லாரிகளில் ஏற்றிவந்துவிட முடியும். ஆனால், இப்போது ரூ.7 ஆயிரம் வரையில் ஆகிறது. இதனால், வெளிமாநிலங்களுக்கு பொருட்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொழில்நிறுவனங்கள் இதனால் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதேபோல், எங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஆட்களுக்கு பெட்ரோலுக்கு என தனியாக மாதம் தோறும் ஒரு தொகையை கொடுப்போம். தற்போது விலை உயர்வினால் ஏற்கனவே வழங்கிய தொகையை கூடுதலாக வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருப்பது பெட்ரோல், டீசல் விலை தான். ஆனால், அதை அரசு உயர்த்துவது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். மேலும், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் அரசு ஏன் இவ்வளவு மெத்தனாக இருக்கிறது என்பது தெரியவில்லை.

இதேபோல், இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு அனுப்பக்கூடிய பெட்ரோல், டீசலை மிகக்குறைந்த விலைக்கு அனுப்புவதாக கேள்விப்பட்டோம். ஆனால், உள்நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கு விலையை அதிகப்படுத்தி விற்பனை செய்வது எந்த விதத்தில் நியாயம். ஒரு அலட்சியப்போக்குடனே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக பாதிக்கும். ஒரே நாடு, ஒரே வரி என்கிறார்கள். அப்படி இருக்கும் போது ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவர தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. மாநில அரசுக்கு ஒரு வரியும், மத்திய அரசுக்கு ஒரு வரியும் போடுகிறார்கள். எனவே, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும். ஒரே நாடு, ஒரே வரி என்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவர தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. மாநில அரசுக்கு ஒரு வரியும், மத்திய அரசுக்கு ஒரு வரியும் போடுகிறார்கள். எனவே, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள்  கொண்டுவர வேண்டும்.

Related Stories: