சேலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.31 கோடி சொத்து குவித்த உதவி செயற்பொறியாளர்

சேலம்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியதாக, ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர், அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் செல்வகுமரன். 1997ம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளராக பணிக்கு சேர்ந்துள்ளார். அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். இதையடுத்து  உதவிசெயற்பொறியாளராக பதவி உயர்வு பெற்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பணியாற்றினார். இவரது மனைவி ஜெயந்தி. இந்நிலையில் செல்வகுமரன், சேலத்தில் சொத்து வாங்கி குவித்துள்ளதாக வந்த புகாரின்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சேலம் டவுன், ஏற்காடு, காடையாம்பட்டி பகுதிகளில் ரூ.3.31 கோடிக்கு சொத்துக்களை செல்வகுமரன் மற்றும் அவரது மனைவி பெயரில் வாங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கியதாக இருவர் மீதும் 4 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

Related Stories: