பெங்களூருவில் சமூக வலைதளங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து கூறிய மாணவி கைது: டெல்லி போலீசார் அதிரடி

பெங்களூரு டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பிரசார வாசகங்கள் வெளியிட்ட வழக்கில் தனியார் கல்லூரி மாணவியை டெல்லி சைபர் செல் போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதத்திற்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு வெளிநாடுகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். அதன்படி, வெளிநாட்டை சேர்ந்த கிரெட்டா தன்பர்க் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘டூல் கிட்’ என்ற பெயரில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான வாசகங்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த திஷா ரவி என்ற மாணவி, கிரெட்டா தன்பர்க்கின் வாசகங்களை ஒரு போராட்ட குழு சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பெங்களூரு வந்த டெல்லி போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், திவ்யா ரவி பெங்களூருவில் உள்ள பிரபல கல்லூரியில் பி.பி.எம் படித்து வருவது தெரியவந்தது. மேலும், பகுதி நேரமாக தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இது தவிர, ‘பிரைடே பார் பியூச்சர்’ என்ற பெயரில் செயல்படும் போராட்ட குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்த இவர், சமூக வலைத்தளம் வாயிலாக பலரிடம் விவசாயிகள் போராட்டம் தொடர்பான கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்ததால், வன்முறையை தூண்டி விடுவதாக டெல்லி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

* நீதிமன்றத்தில் கதறல்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவி திஷா ரவி, கிரெட்டா தன்பர்க்கின் வாசகங்களில் 2 வரிகளை மட்டுமே திருத்தி, மற்றவர்களுக்கு அனுப்பியதாக நீதிபதியிடம் தெரிவித்தார். அப்போது அவர் கதறி அழுதார்.

Related Stories: