காதலர் தினம் இன்று கொண்டாட்டம்..! குமரியில் பூங்கா, கடற்கரைகளில் போலீஸ் தீவிர கண்காணிப்பு: இளம்ஜோடிகள் ஓட்டம்

நாகர்கோவில்: காதலர் தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் கடற்கரைகள் பகுதிகள், பூங்காக்களில் போலீசார் கண்காணித்தனர். ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, காதலர் தினம்  கொண்டாடுகிறார்கள். காதலர் தினத்துக்கு எதிர்ப்புகளும் உள்ளன.  இந்த நிலையில் காதலர் தினமான இன்று, பொது இடங்களில் சுற்றும் காதல் ஜோடிகளை  பிடித்து திருமணம் செய்து வைப்போம் என சில அமைப்புகள் எச்சரித்து இருந்தன. இதையடுத்து சுற்றுலா தலங்கள், கடற்கரைகளில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்குதுறை பீச், முட்டம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் கண்காணித்தனர். நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

காதல்  தினம் என்ற போர்வையில் பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து  இருந்தனர்.நாகர்கோவில் பூங்காவுக்கு இன்று காலை முதல் ஏராளமான இளம்ஜோடிகள் வந்தனர். அவர்களில் சிலர் போலீசை பார்த்ததும் அவசர, அவசரமாக அங்கிருந்து கிளம்பி சென்றனர். முகத்தை மூடியவாறு பல ஜோடிகள், பைக்கில் பறந்ததையும் காண முடிந்தது. காதலர் தினத்தையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் ரோஜா  பூக்களின் விலையும் இன்று கடுமையாக உயர்ந்து இருந்தது. பல்வேறு வகையிலான ரோஜாக்களை இளம்ஜோடிகள் ஆர்வமுடன் வந்து வாங்கி சென்றனர். சில காதல் ஜோடிகள் மிகவும் கண்ணியமான முறையில் கோயில்களில் வந்து வழிபாடு செய்தனர்.

Related Stories: