திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாட்டில் சென்னையில் பத்மாவதி தாயார் கோயில் பூமி பூஜை: காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தொடங்கி வைத்தார்

சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் பத்மாவதி தாயாருக்கு கோயில் கட்டுவதற்கான  பூமி பூஜையை காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திரர் நேற்று தொடங்கி வைத்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு பழம்பெரும் நடிகை காஞ்சனா தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் தனக்கு சொந்தமான நிலத்தை தானமாக வழங்கினார். இந்த இடத்தில் மன்னர்கள் கட்டியது  போன்று சிமென்ட்டை பயன்படுத்தாமல் கற்களால் ஆன பழங்கால வடிவிலான கோயில் 7 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. 3 கிரவுண்ட் நிலத்தில் கோயிலும்,  மீதம் உள்ள 3 கிரவுண்ட் நிலத்தில் மண்டபங்கள், சாமி வாகனம் வைக்கும் இடம்,  நைவேத்தியம் தயாரிக்கும் இடம், பிரசாதம் வழங்கும் இடம் உள்ளிட்டவை கட்டப்படுகிறது.

இந்த இடத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பத்மாவதி தாயார் கோயில் கட்டுவதற்காக கடந்த 10ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தது. கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பாக முறைப்படி பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நேற்று காலை 8.45 மணிக்கு காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திரர் பூஜையை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் திருமலை திருப்பதி  தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, செயல் அலுவலர் கே.எஸ். ஜவகர் ரெட்டி,  கூடுதல் செயல் அலுவலர் ஏ.பி. தர்மாரெட்டி, திருமலை, திருப்பதி தேவாஸ்தான தமிழக தலைவர் ஏ.ஜெ.சேகர் மற்றும் பல்வேறு முக்கிய நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், பக்தர்கள் கலந்து  கொண்டனர்.

அதேபோல், சிறப்பு பூஜையை முன்னிட்டு கோயில்களுக்கு பசு, கன்று தானமாக வழங்கும் ஆந்திர அரசின் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் இலவசமாக பசு, கன்று வழங்கப்படுகிறது. அதில் முதல் கட்டமாக நேற்று 8 கோயில்களுக்கு விஜயேந்திரர் பசுவும், கன்றும் வழங்கினார். இங்கு, திருச்சானுரில் இருப்பது போன்று பத்மாவதி தாயார் பிரதிஷ்டை செய்யப்பட்டு 18 மாதங்களில் கோயில் கட்டி, பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து திருப்பதி திருமலை தேவஸ்தான தமிழக தலைவர் ஏ.ஜெ.சேகர் கூறும்போது, ‘‘சென்னையில் கட்டப்படும் பத்மாவதி தாயார் கோயிலை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேச பெருமாள் கோயிலை கட்டுகிறது. இதற்கான பூமி பூஜை வரும் 22ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து சென்னையில் வெங்கடேச பெருமாள் கோயில் கட்ட 2 இடங்களை அரசு அளித்துள்ளது. இதில் இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இங்கும் கோயில் கட்டுவதறகான அறிவிப்புகள் முறைப்படி அறிவிக்கப்படும்’’ என்றார்.

Related Stories: