தபோவன் சுரங்கத்தில் சிக்கிய 30 பேரை மீட்பதில் குளறுபடி 7 நாட்கள் பாடுபட்டு போட்ட துளையால் ஒரு பயனுமில்லை: கேமரா கூட உள்ளே போகாததால் வீண்

தபோவன்: உத்தரகாண்ட், தபோவன் சுரங்கத்தில் சிக்கிய 30 பேரை காப்பாற்றும் மீட்பு பணிகள் மந்த கதியில் நடக்கும் நிலையில், சுரங்கத்தின் பக்கவாட்டில் துளையிடுவதிலும் குளறுபடிகள் நடந்துள்ளன.  உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஞாயிறன்று பனிப்பாறை உடைந்து, சமோலி மாவட்டத்தில் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், தபோவான் நீர்மின் நிலையம் நாசமானது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த 200 தொழிலாளர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை 38 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 166 பேரை காணவில்லை. இந்நிலையில், தபோவான் சுரங்கத்தில் சிக்கியுள்ள 30 பேரை மீட்கும் முயற்சி 7வது நாளாக நேற்றும் மேற்கொள்ளப்பட்டது. சுரங்கத்தில் அதிகப்படியான சேறும் சகதியும் அடைந்துள்ளதால், பக்கவாட்டு வழியாக துளையிட்டு தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 12 மீட்டர் தூரத்திற்கு 75 மிமீ விட்டத்தில் துளை போட்டு முடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த துளைக்குள் கேமராவை கூட நுழைக்க முடியவில்லை. கேமராவை நுழைந்து சுரங்கத்திற்குள் கொண்டு சென்றால் மட்டுமே அங்கு தொழிலாளர்கள் சிக்கி இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியவரும். இதனால், கேரமாவை நுழைக்கும் அளவுக்கு துளையை பெரிதாக்கும் முயற்சிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 நாளாகி விட்டநிலையில், இந்த குளறுபடியாகல் மீண்டும் துளை போடும் பணி நடக்கிறது. இம்முறை துளையை 250-300 மிமீ விட்டத்திற்கு பெரிதாக்கப்பட உள்ளதாக நீர்மின் நிலைய பொது மேலாளர் அதிர்வால் தெரிவித்துள்ளார். இதனால், ஒருவேளை தொழிலாளர்கள் உயிருடன் இருந்தால், அவர்களை மீட்பதில் தாமதம் ஏற்படும். ஆனால், துளையிடப்பட்ட இடத்தில் இருந்து தண்ணீர் எதுவும் கசியாமல் இருப்பது ஆறுதலாக உள்ளது.

புதிய ஏரி ஆபத்தா?

பனிப்பாறைகள் உடைந்த இடத்தின் கீழ், செயற்கையாக பெரிய ஏரி உருவாகி உள்ளது. இது உடைந்தால், கங்கை ஆற்றில் மீண்டும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், மத்திய அரசு அதிகாரிகள் இதை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஏரியில் இருந்து தானாகவே நேற்று முதல் தண்ணீர் வழிய தொடங்கி உள்ளது. இதனால், ஆபத்து நீங்கி வருவதாக அதிகாரிகள் கூறினர்.

Related Stories: