எங்கள் மகாராஜாவை எட்டப்பன் என்பதா? அமைச்சர் ஜெயக்குமார் மன்னிப்பு கேட்கணும்: ராஜகம்பள நாயக்கர் சமுதாயம் போர்க்கொடி

எங்கள் எட்டயபுரம் மகாராஜாவை தரக்குறைவாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு ராஜகம்பள நாயக்கர் சமுதாய நலச்சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது.  இதுகுறித்து  தமிழ்நாடு ராஜகம்பள நாயக்கர் சமுதாய நலச்சங்க தலைவர் ஆண்டிச்சாமி வெளியிட்ட அறிக்கை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது பேட்டியின்போது எங்கள் கட்சியில் சில எட்டப்பன்கள் உள்ளனர் என தெரிவித்தார். இது  கண்டிக்கத்தக்கது. எட்டயபுரம் மன்னர் எங்கள் எட்டப்ப மகாராஜா பல ஆஸ்தான புலவர்களை உருவாக்கியவர். பாரதியார், உமறுப்புலவர் போன்றவர்கள் எட்டயபுரம் அரசவைக் கவிஞர்களாக இருந்தவர்கள். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில்  ஒருவரான முத்துசாமி தீட்சிதர் போன்ற இசைமேதைகளை ஆதரித்தவர் எட்டயபுரம் மகாராஜா. இயல், இசை, நாடகம் என தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்.

 தமிழ் சினிமாவில் வந்த வசனத்தை மனதில் பதிய வைத்து துரோகம் என்ற வார்த்தைக்கு மாற்று வார்த்தையாக எங்கள் மகாராஜா பெயரை அவதூறாக பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அமைச்சராக இருக்கக் கூடியவர்கள்  வரலாறு தெரிந்து பேச வேண்டும், அமைச்சர் ஜெயக்குமார் தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், அவருக்கு எதிராக நாங்கள் மட்டுமல்ல இந்த பகுதி மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்,  தேர்தலை புறக்கணிப்போம், எட்டயபுரத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் எங்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். எட்டயபுரம் பகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரை கண்டித்து சுவரொட்டிகளும்  ஒட்டப்பட்டுள்ளன.

Related Stories: