கிழக்கு தொடர்ச்சி மலையையே அழித்து 10 ஆயிரம் கோடியில் சாலை போட நினைக்கும் அரசு: திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களை முழுவதுமாக அழித்து விட்டார். ஒரு குளம் என்பது சுற்றுச்சூழலுக்கான கருவி. அந்த குளத்தை சுற்றி கான்கிரீட் சுவர் போட்டு வைத்துள்ளனர். எங்கு  பார்த்தாலும், கான்கிரீட் சுவர் போடுகின்றனர். பாலம் கட்டுகின்றனர். என்ன காரணம் என்று பார்த்தால் 30 முதல் 40 சதவீதம் கமிஷன் வாங்க வேண்டும். ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு வாங்கினால், அதில் ரூ.400 கோடி கமிஷன் அடிக்க  வேண்டும். அமைச்சர் வேலுமணி குளங்களை சுற்றி கான்கிரீட் சுவர் கட்டி வைத்துள்ளார். அந்த குளத்தில் வாழக்கூடிய ஆமைகள் குளத்தை விட்டு 15 அடிக்கு வெளியே வந்து தான் முட்டை போடும். இப்போது அந்த ஆமை இனமே அழிந்து  விடும். ஒவ்வொரு இனமும் அழியும் போது மொத்த பல்லுயிருக்கே ஆபத்து வந்து விடும். அந்த புரிதல் அவர்களுக்கு கிடையாது. அவர்களுக்கெல்லாம் கரன்சி ஒன்றுதான் குறிக்கோள். அதில் நிபுணத்துவம் வாய்ந்த எஸ்.பி.வேலுமணி அனைத்து  குளத்தையும் அழித்துள்ளார்.

ஆளும் அதிமுக அரசின் தலைமை ஒழுங்காக இருந்தால் எல்லாமே ஒழுங்காக இருக்கும். தலைமை டார்கெட் நிர்ணயிக்கின்றனர். ஒவ்வொரு அதிகாரியும் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று சொல்லி விடுகின்றனர். அதனால், ரூ.100 வசூல்  செய்து கொடு என்று சொன்னால், அதிகாரிகள் ரூ.200 வசூல் செய்கின்றனர். ஒரு அலுவலகம் இருக்கிறது. அந்த நிர்வாகம் பொய் கணக்கு எழுதுங்கள். வருமான வரித்துறைக்கு தெரியக்கூடாது. வரும் வருமானமும், செலவும் மாற்றி  எழுதுங்கள் என்று கூறுகின்றனர். அந்த ஊழியர்கள் கணக்கு எழுத மாட்டார்கள். கையில் பணம் எடுத்து வைத்து விடுவார்கள். இந்த முதலாளி, அரசாங்கத்தை ஏமாற்ற நினைப்பார். அந்த முதலாளியை, ஊழியர்கள் ஏமாற்ற ஆரம்பிப்பார்கள்.  அதேதான் தமிழகத்தில் நடக்கிறது. அதற்கு காரணம் முழுக்க, முழுக்க எடப்பாடி, ஓபிஎஸ் ஆட்சி தான். அவர்கள் டார்கெட்டை நிர்ணயிக்க சொல்கின்றனர். அதிகாரிகள் எந்த கவலையும் இல்லாமல் கொள்ளையடிக்கின்றனர். அவர்கள் ஒரு  பகுதியை அமைச்சர்களிடம் கொடுத்து விட்டு, ஒரு பகுதியை அவர்களிடம் வைத்துக்கொள்கின்றனர். டார்கெட் நிர்ணயிப்பதை நிறுத்தினால் ஒழுங்காக இருக்கும்.

 சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் சோப் போட்டு குளிப்பதால்தான் ஆற்றில் நுரை வருகிறது என்று கூறுகிறார். இப்படியெல்லாம் அமைச்சர்களை வைத்துக்கொண்டு இவர்கள் என்ன ஆட்சி செய்யப்போகிறார்கள். சரித்திரத்தை  இவர்கள் புரட்டி பார்த்தால் தெரியும். இப்படி கொள்ளையடித்த பணம் என்றைக்காவது நிலைத்து இருக்கிறதா என்று அவர்கள் பார்த்தால் அதன் மீதான ஆசை போய் விடும். இப்படி கொள்ளையடித்தால் நிலைத்து நிற்காது. ஒரு பொருளை  தீதின்றி ஈட்ட வேண்டும். பொருளை ஈட்டுவது தப்பே கிடையாது. பொருளை ஈட்டுவதை பெருமையாக பேசிய சமுதாயம். அப்படி இருக்கக் கூடிய ஒரு சமுதாயத்தில் பொருளை எப்படி ஈட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால்,  இவர்களுக்கு அந்த பொருளை எப்படி ஈட்ட வேண்டும் என்ற கவலை அச்சமும் இல்லாமல் ஈட்டுகின்றார்கள். அப்படி பொருள் ஈட்டுவதால் தான் இந்த பிரச்னை.

 இயற்கையை அழித்து, வளங்களை அழித்து வாழக்கூடிய வாழ்வு வந்து எந்தவித பிரயோஜனமும் இருக்காது. முதல்முறையாக தமிழகத்தில் ஒரு முதல்வர் உட்கார்ந்து கான்ட்ராக்டர்களை அழைத்து கமிஷன் பேசுவது இப்போதுதான்  நடக்கிறது. மாசுகட்டுப்பாட்டு வாரியமே மாசு அடைந்து விட்டது என்பதே வருத்தமான செய்தி. அதை சரி செய்ய திமுக ஆட்சிக்கு வர வேண்டும். அப்போதுதான் சரியாகும். இப்போது நிலைமை மோசமாக உள்ளது. அதிமுக அரசுக்கு இதற்கு  நேரமே கிடையாது. அதிமுக அரசுக்கு தினம், தினம் ஒரு பிரச்னை உள்ளது. தொடர்ந்து, 4 வருடங்களாகவே இப்படியே நடந்து வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா தயவால் ஆட்சி நடக்கிறது. இவர்கள் எங்கு போய் தொலை நோக்கு  பார்வையோடு சிந்திக்க போகிறார்கள். எரிகிற வீட்டில் அள்ளியது லாபம். அதே மாதிரிதான் இவர்கள் இங்கிருந்து அள்ளி போய் வீட்டில் வைத்துள்ளனர். இப்படி சேர்த்த பொருள் என்றைக்குமே நிலைத்து நிற்காது. வேகமாக காணாமல் போய்  விடும். இயற்கை தன்னை சரி செய்து கொள்ளும். இயற்கை சுழற்றலில் நாம் தாங்குவோமோ என்பதுதான் கேள்வி. இந்த நிலைமை நீடிக்காது. இன்றும் 2, 3 மாதங்களில் இந்த நிலைமை மாறி விடும்.

திராவிட அரசியலின் ஆரம்பம் சமூக நீதி அரசியல். அனைவருக்கும் உணவு, கல்வி என அனைத்தையும் தந்தனர். ஐடி கொள்கை, தொழிற்சாலை என்று முன்னேற்ற பாதையில் கொண்டு வந்தனர். இன்று என்ன தேவையோ அதற்கான  அணியை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த அணி தொடர்ந்து செயல்படும். தமிழகம் முழுவதும் பசுமையான மாநிலமாக, சுற்றுச்சூழலை கொண்டு செல்லும் மக்கள் இயக்கமாக நாங்கள் மாற்றுவோம்.   திருப்பூர் மாவட்டத்தில் வனத்துக்குள் ஒரு  திருப்பூர் என்று ஒரு அமைப்பு உருவாகியுள்ளது. கோவையில் சிறுதுளிர் என்கிற அமைப்பு உருவாகியுள்ளது. திருப்பூரில் சில தொழிலதிபர்கள், அவர்கள் போன தலைமுறை தவறு செய்து விட்டோம். இந்த தலைமுறையில் அதை சரி செய்ய  முயற்சி செய்வோம் என்று ஒப்புக்கொண்டனர். வனத்துக்குள் ஒரு திருப்பூர் அமைப்பு  மூலம் நீராதாரங்களில் வேலை செய்கின்றோம். திருப்பூரில் 12 லட்சம் மரங்கள் நட்டு வைத்துள்ளனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து  தொழிற்சாலைகளில் வரும் கழிவுநீரை சுத்திகரித்து வெளியே விடுகின்றனர். அந்த நீரை மீண்டும் அவர்களே பயன்படுத்திக் ெகாள்கின்றனர். அந்த நீரை ஆற்றில் விட மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

அப்படி ஒரு மாற்றம் அங்கு வந்துள்ளது. அதே மாற்றம் எல்லா இடங்களிலும் வர வேண்டும். அரசாங்கமும் அதை கண்காணிக்க வேண்டும். தொழிலுக்கு யாரும் எதிரியாக இருக்க மாட்டார்கள். தொழில் தேவை. முன்னேற்றம் தேவை. ஆனால்,  எந்தவிதமான தொழில் என்பதை பார்க்க வேண்டும்.  ஜெர்மனியில் ஆயத்த ஆடை தொழிற்சாலை, தோல் தொழிற்சாலை இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது என்று கூறுகின்றனர். அந்த நாடு பல்லுயிரை பாதுகாப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது  என்று முதலிலேயே முடிவெடுக்கிறது. எல்லாவற்றிலும் ஐரோப்பிய பாணியை பேசும் நாம் சுற்றுச்சூழலிலும் அதையும் பார்க்க வேண்டும். மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவை வர்த்தக பூமியாக பார்க்காமல் இங்குள்ள மக்களை  பாதுகாக்க வேண்டியது நல்ல அரசின் கடமை. மத்திய அரசுக்கு அதைப்பற்றி எந்த கவலையும் கிடையாது. மூன்று, நான்கு கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக பிரதமர் மோடி எதை வேண்டுமானாலும் செய்வார்.

எதை வேண்டுமானாலும் அழிப்பார். எடப்பாடி பழனிசாமிக்கு தொலைநோக்கு பார்வை கொஞ்சமாவது இருந்தால் மனசாட்சி இருந்தால் அப்படி செய்ய மாட்டார். அவர் கிழக்கு தொடர்ச்சி மலையையே அழித்து அங்கு 10 ஆயிரம் கோடியில்  சாலை போட நினைத்தவர். சுற்றுச்சூழலை அழித்து ஒரு தொழிலை உண்டாக்குவது தேவையில்லாதது. அதற்கு மாற்று என்ன வழி என்று கண்டுபிடித்து சுற்றுச்சூழலுக்கு அழிவில்லாத தொழிலை உண்டாக்க வேண்டும்.

Related Stories: