146 கோடி செலவில் கட்டப்பட்ட மேடவாக்கம் உயர்மட்ட மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. குறிப்பாக வேளச்சேரி முதல் தாம்பரம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. காலை மற்றும் மாலை  நேரங்களில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி வந்தது. இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில்  சோழிங்கநல்லூர், மாம்பாக்கம்,  பரங்கிமலை செல்லும் சாலை 3 சந்திப்புக்களை கொண்ட மேடவாகத்தில் 3 கி.மீ நீளத்திற்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.  அதன்படி 3 சந்திப்புகளை மையப்படுத்தி மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் இருந்து  ஜல்லடையான்பேட்டை சந்திப்பு வரை 2 கி.மீ மற்றும் தாம்பரம் - வேளச்சேரி சாலையில் ஜல்லடையான்பேட்டை சந்திப்பில் இருந்து 1 கி.மீ நீளத்தில் ஒரு பாலம் என 2 மேம்பாலம் அமைக்க 146 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த  பாலத்தில் ஒரு நேரத்தில் 3 கனரக வாகனங்கள் செல்ல முடியும். இந்த மேம்பாலம் கட்டுமான பணி கடந்த 2016ல் தொடங்கப்பட்டன. ஆனால், கட்டுமான பணியை எடுத்திருந்த ஒப்பந்த நிறுவனம் கடந்த 2018ல் பணிகளை நிறுத்தியது.

 

இதனால், ஓராண்டிற்கு மேல் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இது தொடர்பாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்டு கடந்த 2019ல் பணிகள் தொடங்கியது. இத்திட்டத்திற்கான 112  பில்லர்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தற்போது ஜல்லடையான்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் 720 மீட்டர் நீளம் கொண்ட மேம்பால பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்றன.  அதே நேரத்தில் காயிதே மில்லத்  கல்லூரியில் இருந்து ஜல்லடியான்பேட்டை நோக்கி செல்லும் மேம்பால பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. அந்த பகுதியில் நில ஆர்ஜிதம் செய்ய வேண்டியிருப்பதால், அங்கு மட்டும் பணிகளை முடிக்க வேண்டியுள்ளது. அந்த பகுதியில்  பால பணிகள் மார்ச் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பக்கம் பாலப்பணிகள் முடிவடைந்த நிலையில்  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

Related Stories: