பாகப்பிரிவினை வழக்கில் சொத்துகளை இறுதி செய்யும் விசாரணைக்கு கலெக்டரை நியமிப்பதா, வக்கீல் கமிஷனரை நியமிப்பதா? டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு தனி நீதிபதி பரிந்துரை

சென்னை: தனி நபர் சொத்து பாகப்பிரிவினை வழக்கில் யார் யாருக்கு எந்தெந்த சொத்து என்பதை இறுதி தீர்ப்பாணை விசாரணைக்கு கலெக்டரை நியமிக்கலாமா, வக்கீல் கமிஷனரை நியமிக்கலாமா என்பதை முடிவு செய்ய டிவிஷன் பெஞ்ச்  விசாரணைக்கு பரிந்துரை செய்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஒரு குடும்பத்துக்கு சொந்தமான சொத்துகளை பாகப்பிரிவினை செய்வது தொடர்பான வழக்கில், முதலில் யார் யாருக்கு எவ்வளவு பாகம் என்பதை சிவில்  நீதிமன்றம் முடிவு செய்து முதல் நிலை தீர்ப்பாணை பிறப்பிக்கும். இதை தொடர்ந்து, யார் யாருக்கு எந்தெந்த சொத்துகள் என்று பாகப்பிரிவினை செய்ய வக்கீல் கமிஷனரை நீதிமன்றம் நியமிக்கிறது. இவர், தரும் அறிக்கையின் அடிப்படையில்  இவர்களுக்கு இந்த சொத்துகள் என்று இறுதி தீர்ப்பாணையை நீதிமன்றம் பிறப்பித்து வருகிறது. ஆனால், உரிமையியல் நடைமுறை சட்டப்பிரிவு 54ன்படி மாவட்ட கலெக்டர்தான் யார் யாருக்கு எந்தெந்த சொத்துகள் என்று முடிவு செய்து  அறிக்கை தர அதிகாரம் உள்ளது. இந்த பணியை செய்ய வக்கீல் கமிஷனர்களை நியமிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று நாமக்கல்லை சேர்ந்த சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:  உரிமையியல் நடைமுறைச் சட்டத்தில் கலெக்டர்தான் இந்த பணியை செய்ய  வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 1995ம் ஆண்டு கலெக்டருக்கு பதில் வக்கீல் கமிஷனரை நியமிக்கலாம் என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதுபோன்ற சட்டத்திருத்தம் தமிழகத்தில் கொண்டு  வந்ததாக தெரியவில்லை. ஆனால், பாகப்பிரிவினை வழக்கில் கலெக்டரை நியமிக்க தேவையில்லை. வக்கீல் கமிஷனரை நியமிக்கலாம் என்று தனி நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தீர்ப்பு அளித்துள்ளார். அதேநேரம் அவர் இதுதொடர்பாக உச்ச  நீதிமன்றம் பிறப்பித்துள்ள பல்வேறு தீர்ப்புகளை பரிசீலிக்கவில்லை. எனவே சொத்துகளை பிரிக்கும் பணிக்கு கலெக்டரை நியமிக்க வேண்டுமா, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பிறப்பித்த தீர்ப்பின்படி வக்கீல் கமிஷனரை நியமிக்க வேண்டுமா என்பது  குறித்து முடிவு செய்ய டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு உட்படுத்த இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன். தமிழகம் முழுவதும் சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக ஏராளமான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில்  நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை விரைவாக தலைமை நீதிபதி முன்பு பரிசீலனைக்கு பட்டியலிடும்படி உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறேன் என்று நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories: