பந்தலூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை கரோலில் அடைப்பு

பந்தலூர்: பந்தலூர் அருகே ஆட்கொல்லி யானையை வனத்துறையினர் நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரம்பாடி கண்ணம்பள்ளி பகுதியில் ஒரு முதியவர், கொளப்பள்ளி டேன்டீ பகுதியில் வசித்து வந்த தந்தை, மகன் உள்பட 3 பேரை கடந்த டிசம்பர் மாதம் ஆட்கொல்லி யானை சங்கர் கொன்றது. அந்த யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றபோது யானை அங்கிருந்து தப்பி கேரளா வனப்பகுதிக்கு சென்றதால் பிடிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்த ஆட்கொல்லி யானை சங்கர் கேரளா வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து சேரம்பாடி சப்பந்தோடு பகுதியில் முகாமிட்டது.

அந்த யானையை பிடிக்கும் முயற்சியில் 50 வேட்டை தடுப்பு காவலர்கள், 6 கும்கி யானைகள் உதவியுடன் கால்நடை மருத்துவர்கள் கண்காணித்து மயக்க ஊசி செலுத்தினர். ஊசி செலுத்தப்பட்ட ஆட்கொல்லி யானை, கூட்டத்துடன் இருந்ததால் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் சத்தியமங்கலம் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து கால்நடை மருத்துவர்கள் அசோகன், விஜயராகவன், ராஜேஷ்குமார் ஆகியோர் அழைத்து வரப்பட்டு யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். யானை வனப்பகுதியில் கூட்டத்துடன் மறைந்திருந்ததால் வனத்துறையினர் யானையை பிடிப்பதற்கு பத்து லைன் மயானம் பகுதியில் உள்ள மரத்தின்மேல் மூங்கிலால் பரண் அமைத்து  கண்காணித்து வந்தனர். வனப்பகுதியிலிருந்து யானையை விரட்டி வந்த வனத்துறையினர் பரண் அருகே நிறுத்தினர்.

அப்போது, மரத்தின் மேல் காத்திருந்த கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், ராஜேஷ்குமார் ஆகியோர் ஆட்கொல்லி யாைனைக்கு மயக்க ஊசி செலுத்தினர். அப்போது அந்த யானையுடன் இருந்த மற்ற இரு பெண் யானைகள் ஆக்ரோஷமாக வனத்துறையினரை விரட்டியது. இதையடுத்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு 2 பெண் யானைகளும் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன. அதன்பின், கயிற்றால் ஆட்கொல்லி யானையின் கால்கள் கட்டப்பட்டு 2 கும்கிகள் சுற்றி நிறுத்தப்பட்டன. பின்னர், ஜேசிபி மூலம்  லாரியில் யானை ஏற்றப்பட்டது. அங்கிருந்து முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டு கரோலில் அடைக்கப்பட்டது.

Related Stories: