சிமென்ட், மணல், கம்பி விலை உயர்வை கண்டித்து கட்டுமான நிறுவனத்தினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே,  அகில இந்திய கட்டுமான வல்லுநர் சங்கம், உரிம அளவர்கள் சங்கம், தமிழ்நாடு கட்டுமான உழைப்பு தொழிலாளர்கள் நலசங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் சார்பில் சிமென்ட், ஜல்லி, கம்பிகள் உள்பட அனைத்து கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அகில இந்திய கட்டுமான வல்லுநர்கள் சங்க செங்கல்பட்டு மைய தலைவர்  வெங்கடேசன் தலைமை வகித்தார். கல்பாக்கம் மைய தலைவர் கே.மதுரைமுத்து, உரிம அளவர்கள் சங்க தலைவர் ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு, கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்தவேண்டும். இந்த விலையேற்றத்தால், பொதுமக்களும் கட்டுமான தொழிலாளர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதனால் உடனடியாக, கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி, அதற்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், விரைவில் தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என கோஷமிட்டனர்.

Related Stories: