அனுமதியோ 3 அடி... அள்ளியதோ 10 அடி... விதிமீறி செயல்படும் அரசு மண் குவாரி: நிலத்தடிநீர் குறைந்து குடிநீருக்கு பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பட்டறைபெரும்புதூர் ஏரியில் இயங்கும் அரசு மண் குவாரியில் விதிமுறையை மீறி அளவுக்கதிகமாக மண் எடுத்து வருகின்றனர். 3 அடிக்கு மேல் தோண்டக்கூடாது என்ற விதிமுறையை மதிக்காமல் 10 அடி ஆழம் வரை மண் எடுத்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 1,945 ஏரிகள், 1,895 குளங்கள், பொதுப்பணித்துறை ஏரி நீர்ப்பாசனத்தை நம்பி 8,455 ஹெக்டேர் நிலங்கள் மற்றும் ஒன்றிய ஏரி நீர்ப்பாசனத்தை நம்பி 4,676 ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. பருவ மழை தொடங்கினால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கிவிடும். ஆனால், ஏரிக்கு நீர் வரும் வரத்து கால்வாய், ஏரி மற்றும் குளங்கள் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால், பெரும்பாலான ஏரிகளுக்கு தண்ணீர் வருவதில்லை. ஏரி, குளங்களை நம்பி பாசன வசதி பெறும் விளை நிலங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், தூர்ந்துபோன ஏரிகளை ஆழப்படுத்துவதாக கூறி தனியார்கள், ஏரியில் மண் எடுத்துக் கொள்ள அரசு அனுமதிக்கிறது. இந்த மண், சாலை அமைத்தல், செங்கல் சூளைகளுக்கும் பயன்படுகிறது. ஏரிகளில் மண் எடுப்பவர்கள், பகல் நேரத்தில் மட்டுமே மண் எடுக்க வேண்டும். அனுமதி பெற்ற லோடு மண் மட்டுமே எடுக்க வேண்டும். அதுவும், 3 அடி ஆழத்திற்கு மேல் மண் எடுக்கக் கூடாது என்று அரசு விதிமுறை வகுத்துள்ளது. ஆனால், இந்த விதிமுறைகள் காற்றில் பறக்கவிட்டு தங்கள் இஷ்டத்திற்கு 10 அடி ஆழத்திற்கு மேல் மண் எடுக்கின்றனர். நடப்பாண்டு பருவ மழை முற்றிலும் பொய்த்ததால் அனைத்து ஏரிகள், குளங்கள் வறண்டு கிடக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

இந்நிலையில், அளவுக்கதிகமாக ஏரிகளில் மண் எடுப்பதால், மழைக்காலத்தில் ஏரிக்கு தண்ணீர் வந்தாலும் அதனை ஈர்த்துக் கொள்ள இயலாது. இதன் காரணமாக, மேலும் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஏரியை நம்பியுள்ள கிராமங்கள், விவசாய கிணறுகளுக்கு தண்ணீர் ஊற்று கிடைப்பது முற்றிலும் தடைபடும். குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டு, கோடைக் காலத்தில் வறட்சியை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, பட்டறைபெரும்புதூர் ஏரியில் இயங்கும் அரசு மண் குவாரியை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து, விதியை மீறிய ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நூதன முறையில் மணல் திருட்டு

மாவட்டத்தில் மணல் குவாரி இல்லாததால் வீடு கட்ட முடியாமல் பலர் தவிக்கின்றனர். பட்டறைபெரும்புதூர் ஏரியில் 3 அடிக்கு கீழே மணல் உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி, 4 யூனிட் கொண்ட லாரிகளில், 3 யூனிட் மணல் ஏற்றுகின்றனர். அதன் மீது தார்ப்பாய் போட்டு ஒரு யூனிட் சவுடு மண் ஏற்றுகின்றனர். இதன்மூலம் மணலுக்கு கூடுதல் தொகையாக பல ஆயிரம் ரூபாயை ஒப்பந்ததாரர்கள் வசூலிக்கின்றனர்.

இவ்வாறு நூதன முறையில் மணல் கடத்தலும் நடந்துவருவதாக  அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.

Related Stories: