எத்தினஹொளே குடிநீர் திட்டத்தை 2023ம் ஆண்டு முடிக்க இலக்கு: அமைச்சர் சுதாகர் தகவல்

சிக்கபள்ளாபுரா: கோலார், சிக்கபள்ளாபூர் உட்பட மேலும் பல மாவட்டங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் எத்தினஹொளே குடிநீர் திட்டப்பணிகள் 2023ம் ஆண்டு இறுதியில் முடிக்கப்படும் என அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், ``கோலார், சிக்கபள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் மற்றும் துமகூரு ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எத்தினஹொளே குடிநீர் திட்டம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. கடந்தாண்டு இறுதியில் 70 சதவீதம் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பணிகள் மந்தமாக நடந்ததால் தாமதமாகியுள்ளது. எத்தினஹொளே குடிநீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கான முழு பொறுப்பும் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் கட்டப்பணிக்கு 13.93 ஹெக்டேர் வனத்துறைக்கு சொந்தமான நிலம் உட்பட 276.08 ஹெக்டேர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கால்வாய் அமைக்கும் பணி மற்றும் தண்ணீர் வினியோகம் செய்ய 4,913.93 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நில கையகப்படுத்தும் பணிகள் அனைத்தும் உரிய முறையில் மேற்கொள்ளும் பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளதால் வரும் 2023ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்’’ என்றார்.

* 1800 கோடி மதிப்பில் திட்டம்

மாநிலத்தில் உள்ள 10 மருத்துவ கல்லூரிகளின் மேம்பாட்டிற்காக ரூ.1,800 கோடி மதிப்பில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. மைசூரு மற்றும் கலபுர்கி மாநகரங்களில் கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையின் கிளையை  மாநில அரசின் முழு செலவில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நர்சிங் மற்றும் பாரமெடிக்கல் கல்விக்கு மட்டும் தனியாக  பல்கலைக்கழகம் தொடங்கும் யோசனை அரசிடம் உள்ளது. இதில் உள்ள சாதக-பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை கொடுப்பதற்காக 14 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஆய்வு நடத்தி கொடுக்கும் அறிக்கையை  அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்றார்.

Related Stories: