முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: திருப்பூர் வாலிபரிடம் விசாரணை

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று திருப்பத்தூர், கிருஷ்ணகிரியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனிடையே சேலம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையின் அவசர தொலைபேசி எண் 100க்கு நேற்று போன் அழைப்பு ஒன்று வந்தது.

அதில் பேசிய மர்மநபர், சென்னை மற்றும் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்து விட்டார்.

இதுபற்றி சேலம் மாநகர கமிஷனர் அலுவலகத்திற்கும், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சேலத்தில் உள்ள முதல்வர் வீட்டின் அருகில் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து பேசியது தெரியவந்துள்ளது. இதையடுத்து மிரட்டல் விடுத்ததாக சேகர் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் அவர் தனது செல்போனை  காணவில்லை என்று புகார்  தெரிவித்துள்ளார்.

Related Stories: