18 வயதுக்கு உட்பட்டோருக்கு தனி பட்ஜெட்: சட்டீஸ்கர் மாநில அரசு முதல்முறையாக அறிமுகம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் முதன்முறையாக 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தனி பட்ஜெட்டை அம்மாநில அரசு தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பேரவையில் 2021-22ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தலைமை செயலக அதிகாரிகள் கூறுகையில், ‘முதல்வர் பூபேஷ் பாகேலின் அறிவுறுத்தலின்படி, பிறந்த குழந்தை முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இவற்றிற்காக, வெவ்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் ஒரே நேரத்தில் தாக்கல் செய்யப்படும். அதேபோல் விவசாய பட்ஜெட், பெண்கள் பட்ஜெட் ஆகியவையும் தனித்தனியாக தாக்கல் செய்யப்படும்.

குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்கள் கிட்டதிட்ட 6 துறைகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளி கல்வி, சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு போன்றவை அடங்கும். மொத்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்கான பட்ஜெட் தொகை எவ்வளவு என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆதாரங்களின்படி, மாநில பட்ஜெட் இந்தாண்டு ஒரு லட்சம் கோடியை எட்டக்கூடும். இதில், குழந்தை பட்ஜெட் 20 முதல் 30 சதவீதம் வரை இருக்கலாம்.

 ெபண் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் குழந்தைகளுக்காக 14 முதல் 15 நூறு கோடி வரை செலவிடுகிறது. இதேபோல், பள்ளி கல்வித் துறையும் குழந்தைகளுக்காக ஆயிரம் கோடிக்கு மேல் செலவழிக்கிறது. இந்த பட்ஜெட்டை தயாரிப்பதில் மாநில திட்டமிடல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. குழந்தைகள் தொடர்பான திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் போது அவர்கள் தொடர்பான கண்காணிப்பை எளிதாக்க முடியும். சரியான நபர்கள் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள்’ என்றனர்.

Related Stories: