கிலோ ரூ.120க்கு விற்பனை ஓசையின்றி உயரும் சின்ன வெங்காயம் விலை-பொங்கலுக்கு பிறகும் குறையவில்லை

நெல்லை : சின்னவெங்காயம் விலை பொங்கலுக்கு பின்னரும் ஓசையின்றி தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனையாவதால் ஏழை, நடுத்தர மக்கள் சின்னவெங்காயம் நுகர்வை குறைத்து விட்டனர்.இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை செழிப்பாக பெய்த நிலையில் விவசாயப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஆயினும் சில காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி சின்னவெங்காயம் கிலோ ரூ.90 முதல் ரூ.100 என்ற விலையில் இருந்தது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பின்னரும் சின்ன வெங்காயம் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. தற்போது கடந்த சில தினங்களாக சின்னவெங்காயம் விலை ஓசையின்றி உயர்ந்து வருகிறது. பாளையங்கோட்டை உழவர் சந்தையில் கடந்த ஜனவரி 17ம்தேதி ஒரு கிலோ ரூ.80ஆக இருந்தது. இந்த மாத துவக்க நாளில் ஒரு கிலோ ரூ.74ஆக குறைந்தது.

2ம் தேதி கிலோ ரூ.85 என ஒரே நாளில் 11 ரூபாய் உயர்ந்தது. அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் 6ம் தேதி கிலோ ரூ.105ஆக உயர்ந்து. நேற்று பாளை மகாராஜநகர் உழவர் சந்தையில் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.114ஆக உயர்ந்தது. 2ம் ரகம் ரூ.100க்கும் 3ம் ரகம் ரூ.90க்கும் விற்பனையாகிறது. அதே நேரத்தில் பிற மார்க்கெட்டுகளில் முதல் ரகம் ரூ.120ஐ தொட்டது.

பல்லாரி வெங்காயம் கிலோ ரூ.50ஆக உள்ளது. தொடர்ந்து விலை உயர்வதால் ஏழை நடுத்தர மக்கள் சின்னவெங்காயத்தை தவிர்த்து பல்லாரி வெங்காயத்தை வாங்குகின்றனர். வரத்து குறைவதால் விலை உயர்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: