சொந்த வீடு இருந்தும் இறந்த மூதாட்டி உடலை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மருமகள்-பக்கத்து வீட்டில் இறுதிச்சடங்கு

அறந்தாங்கி : சொந்த வீடு இருந்தும் இறந்த மூதாட்டி உடலை வீட்டுக்குள் அனுமதிக்க மருமகள் மறுத்து விட்டதால் பக்கத்து வீட்டில் மூதாட்டி உடல் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டையை சேர்ந்தவர் மீனாம்பாள் (65). இவரது கணவர் நடேசன் இறந்து விட்டார். மீனாம்பாளுக்கு ஒரு மகன், 3மகள்கள் உள்ளனர்.

மீனாம்பாளின் மகன் முருகன் ஓராண்டுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். இதனால் மீனாம்பாள் வீட்டில் மருமகள் லதா மட்டும் வசித்து வந்த நிலையில் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்தது. இதனால் வீட்டின் தாழ்வாரத்தில் மீனாம்பாள் தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தார்.

இந்நிலையில் அறந்தாங்கியில் வசித்து வரும் இளைய மகள் விமலாவின் வீட்டுக்கு சில தினங்களுக்கு முன் மீனாம்பாள் சென்றிருந்தார். அங்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு மீனாம்பாள் நேற்றுமுன்தினம் இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள், மீனாம்பாளின் உடலை சொந்த ஊரான ஆவணத்தாங்கோட்டையில் உள்ள சொந்த வீட்டுக்கு எடுத்து வந்தனர். அப்போது வீட்டுக்குள் மீனாம்பாள் உடலை அனுமதிக்க மறுத்த மருமகள் லதா உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டார். வீட்டுக்குள் உடலை வைத்தால் நடப்பதே வேறு, தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து செய்வதறியாது குழம்பி போயிருந்த உறவினர்களின் நிலையை பார்த்து பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினரான இளஞ்செழியன் என்பவர், மீனாம்பாளின் உடலை அவரது வீட்டில் வைக்க சம்மதித்தோடு அனைத்து சடங்குகளையும் தானே செய்து கொள்வதாகவும் தெரிவித்தார். இதனால் மீனாம்பாளின் உடலை இளஞ்செழியன் வீட்டில் வைத்து உறவினர்கள் இறுதி சடங்கு செய்தனர்.

அப்போது துக்கத்துக்கு வந்தவர்கள், இறந்த உடலை கூட சொந்த வீட்டுக்குள் மருமகள் அனுமதிக்கவில்லையென வருத்தமாக பேசி கொண்டனர். இறுதி சடங்கு முடிந்ததும் ஆவணத்தாங்கோட்டை மயான கரையில் மூதாட்டி மீனாம்பாள் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Stories: