13 ஆண்டுகளாகியும் மேம்பாலங்கள் உட்பட வளர்ச்சி திட்டப்பணிகள் இல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்ந்தும் நகராட்சியாகவே இயங்கும் வேலூர் மாநகராட்சி

* ஐஏஎஸ் கமிஷனர், ஐபிஎஸ் காவல்துறை கட்டமைப்பு இல்லை

* ஆக்கிரமிப்பு அகற்ற அஞ்சும் அதிகாரிகளால் போக்குவரத்து பாதிப்பு

* முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குரலற்றவர்களின் குரல்

வேலூர் : வேலூர் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருந்து வந்தது. இதை கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு நிர்வாக வசதிக்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டமாக பிரித்தது. இதனால் தொழிற்சாலைகள் இல்லாத மாவட்டமாக வேலூர் மாவட்டம் உருவாகி உள்ளது. அதேபோல் வளர்ச்சி பெறாத மாநகராட்சியாகவும் இருந்து வருகிறது.

வேலூர் நகராட்சி கடந்த 2008ம் ஆண்டு மாநகராட்சி அந்தஸ்தை பெற்றது. அதன் பிறகு தேவையான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. இன்னமும் நகராட்சி போலவே இயங்கி வருகிறது. மக்கள் தொகை மற்றும் வாகனங்கள் பல மடங்கு அதிகரித்துள்ள போதிலும் சாலை விரிவாக்கம் இல்லாததால் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கிறது.

 மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் மாநகராட்சி சேர்க்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் வேலூர் மாநகராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரியை மாநகராட்சி கமிஷனராக நியமிக்காததால் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது உட்பட வளர்ச்சி திட்ட பணிகள் என்பது கனவாகவே இருந்து வருகிறது. மாநகராட்சியின் 4 மண்டலங்களில் சுகாதார அலுவலர்கள் 4 பேர் மட்டுமே இருந்து வருகின்றனர்.

அதேபோல் மாநகராட்சி காவல்துறை ஆணையர் கட்டமைப்பும் அமைக்கப்படாமலேயே உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே நிர்வாக திறன் மேம்படவும், மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணவும் மாநகராட்சிக்கு கமிஷனராக ஐஏஎஸ் அதிகாரியும், மாநகர காவல் துறைக்கு ஐபிஎஸ் அதிகாரியையும் நியமிக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

மேலும் வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முக்கியமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகளும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு, மாநகராட்சி முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இதேபோல் வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண மாநகர சுற்றுச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் காட்பாடி அடுத்த அம்முண்டி- மேலகுப்பம்- மூஞ்சூர்பட்டு சாலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வருவதால் சுற்றுச்சாலை திட்டமான வட்டச்சாலை திட்டம் கேள்விக்குறியானது.

இதனால் வேலூர், குடியாத்தம் புறவழிச்சாலைகள் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக வேலூர் தேசிய நெடுஞ்சாலை 2016-17 திட்டப்பணிகளில் மங்களூர்- விழுப்புரம் சாலையை அகலப்படுத்தவும், வேலூர், குடியாத்தம் நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் ₹104 கோடியில் வேலூர் மற்றும் குடியாத்தம் புறவழிச்சாலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கான நில எடுப்புப்பணிகள் தற்போதுதான் நிறைவடையும் நிலையில் உள்ளது.

அதேபோல், 20.7 கி.மீ நீளம் கொண்ட வேலூர் வட்டச்சாலையான புறவழிச்சாலை காட்பாடி சாலையில் லத்தேரி நகருக்கு முன்பாக வலதுபுறம் பிரிந்து லத்தேரி, அன்னங்குடி, திருமணி, சோழமூர், கொத்தமங்கலம், பொய்கை, புத்தூர், தெள்ளூர், சேக்கனூர், அரியூர், பென்னாத்தூர், சாத்துமதுரை, நெல்வாய் கிராமங்கள் வழியாக விழுப்புரம்-மங்களூர் தேசிய நெடுஞ்சாலை 234ல் இணைகிறது.

இவை அனைத்தும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. ஆனாலும் இன்னும் முழுமையாக பணி நிறைவு பெறாமல், நிதிக்காக அப்படியே கிடப்பில் உள்ளது.மேலும் வேலூர் மாநகராட்சியில் காட்பாடி முதல் பாகாயம் வரை உயர்மட்ட சாலை அமைக்க ₹1,220 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

வேலூர்- ஆற்காடு சாலையில் சிஎம்சி மருத்துவமனை அருகே சுரங்பாதை அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர்.இதுபோன்ற சாலை மேம்பாடு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வேலூர் அண்ணாசாலை, ஆற்காடு சாலை, காட்பாடி சாலையில் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு நோயாளிகளை அழைத்துச் செல்ல முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

அடுக்கம்பாறை மருத்துவகல்லூரிக்கு சென்று வர ஒரு நாள் கூலியை விட வேண்டி உள்ளது. எனவே வேலூரில் கைவிடப்பட்ட அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையை மீண்டும் முழு அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், பல்நோக்கு மாவட்ட தலைமையிட மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று ஏழை மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தாமல் ஜவ்வாக இழுத்துக்கொண்டிருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

டெல் நிறுவனம் மீண்டும் செயல்படுமா?

பின்தங்கிய வடாற்காடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், கடந்த 1983ம் ஆண்டு காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் தொடங்கப்பட்ட, தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் என்ற டெல் நிறுவனம் 1987ல் உற்பத்தியை தொடங்கியது. நைட்ரோ கிளிசரின், டெட்டனேட்டர், எமல்ஷன் வெடிமருந்து, வெடி திரி என வெடிமருந்து உற்பத்தியில் ஈடுபட்டு லாபத்தில் நடைபோட்ட டெல் நிறுவனம் 2013ம் ஆண்டு நஷ்டத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு முழுமையாக இழுத்து மூடப்பட்டது. தொழிலாளர்கள் விஆர்எஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்வாறு மூடப்பட்ட இந்நிறுவனத்தை மீண்டும் இயங்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்நிறுவனத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாரத் எலக்ட்ரிக்கல் நிறுவனமான பெல் நிறுவனம் எடுத்து நடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. இதற்காக இந்நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பல முறை இங்கு வந்து ஆய்வு செய்து சென்றனர்.

பின்னர் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் தமிழக அரசுடன் இந்நிறுவனத்தை எடுத்து நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதற்கேற்ப டெல் நிறுவனத்தின் அசையும், அசையா சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியது. இப்பணியும் முடிந்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு புத்துயிரூட்டுவது தொடர்பாக தமிழக அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே வேலூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

அமிர்தியில் ஒளிரும் மிருககாட்சி சாலை அமைவது எப்போது?

வேலூர் மாவட்டம் அமிர்தியில் வனஉயிரியல் பூங்கா உள்ளது. இங்கு வெளிநாடுகளில் உள்ளதுபோல இரவு நேரங்களில் வன உயிரினங்களை கண்டுகளிக்கும் வகையில் ஒளிரும் மிருககாட்சி சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு சென்று வனத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். ஆனால் நிதி ஒதுக்கி அடுத்தகட்ட பணிகளை தொடங்காமல் இத்திட்டம் ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பாலாற்றில் தடுப்பணை கட்டுவது எப்போது?

வேலூர் பாலாற்றில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மணல் அள்ளப்பட்டு வருவதால் பாலைவனமாகவே காட்சியளிக்கிறது. தோல் தொழிற்சாலைகளும், ரசாயன தொழிற்சாலைகளும், உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுநீரும் பாலாற்றில் திறந்துவிடுவதால், நிலத்தடி நீரும் விஷமாகி வருகிறது. இதையும் தாண்டி பல ஆண்டுகளுக்கு ஒருமுறை இயற்கையின் கருணையால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் தேக்கி வைக்க தடுப்பணைகள் கட்டப்படவில்ைல.

ஆங்காங்கே சிறிய அளவிலான தடுப்பணைகளாவது கட்ட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள், பாலாறு பாதுகாப்பு இயக்கங்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காமல் இருக்கிறது.

ஜெயலலிதா அறிவித்த வேலூர் கோட்டம் அமையுமா?

கடந்த 2014-15ம் ஆண்டு மானியக் கோரிக்கையின்போது விழுப்புரம் கோட்டத்தை இரண்டாக பிரித்து தமிழக அரசு போக்குவரத்து கழகம் வேலூர் புதிய கோட்டமாக உருவாக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி ரங்கம் கோட்டம் உருவானது. திருவண்ணாமலை மண்டலத்தை வேலூர் கோட்டத்துடன் இணைப்பதற்கு விழுப்புரம் கோட்டம் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் வேலூர் கோட்டம் உருவாக்கும் பணியில் போக்குவரத்து கழக அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.

இதற்கிடையே, ஜெயலலிதா பதவியை இழந்தார். இதையடுத்து, புதிய கோட்டம் உருவாக்கும் பணியை போக்குவரத்து கழக அதிகாரிகள் கைவிட்டுள்ளனர். இந்நிலையில் புதிதாக மாவட்டங்கள் பிரித்துள்ளதால் அறிவிப்போடு நின்றுபோன புதிய வேலூர் கோட்டம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

நிதிக்காக காத்திருக்கும் 85 ஏக்கர் பூங்கா திட்டம்

வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டதால், வேலூரில் சுற்றுலாத்தலம் அமைக்க அகரம் சேரியில் 85 ஏக்கரில் தோட்டக்கலை பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, பூங்கா கட்டமைப்புகளுக்கான நிதித்தேவை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் ஓராண்டாகியும் நிதியின்றி இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே தோட்டக்கலை பூங்காவிற்கு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: