சென்னை ராமாபுரத்தில் அ.ம.மு.க கொடிக்கம்பம் அகற்றப்பட்டதா?: சரிபார்த்து தெரிவிக்க எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்களுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர். தோட்ட நுழைவு வாயில் அருகே நிறுவப்பட்டிருந்த அமமுக கொடிக்கம்பம் அகற்றப்பட்டதா என்று சரிபார்த்து தெரிவிக்குமாறு எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருக்கிறது. தங்கள் வீட்டு சுவர் அருகே அமைக்கப்பட்டுள்ள அமமுக கொடிக்கம்பத்தை அகற்ற கோரி எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள்கள் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் இந்த கேள்வியை முன்வைத்திருக்கிறது. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா நேற்று சென்னை திரும்பினார். அவர் கொடியேற்றுவதற்கு ஏதுவாக மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இல்லம் அமைந்துள்ள ராமாபுரம் தோட்ட நுழைவு வாயிலில் அமமுக சூலூர் மாவட்ட செயலாளர் லக்கி முருகன் கொடிக்கம்பத்தை அமைத்திருந்தார்.

அந்த கொடிக்கம்பம் தங்களுடைய இல்லத்தை ஒட்டியும், நடைபாதைக்கு இடையூறாகவும் உள்ளதால் அதை அகற்றக்கோரி எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்கள் கீதா, ராதா ஆகியோர் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இந்நிலையில் அதே இடத்தில் லக்கி முருகன் மீண்டும் கொடிக்கம்பத்தை நட்டுள்ளதால் அவற்றை அகற்ற வேண்டும் என்றும் தங்களுடைய குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சக்தி சுகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அச்சமயம் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொடிக்கம்பம் அகற்றப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து தெரிவிக்க மனுதாரர் வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவுக்கு பிப்ரவரி 11ம் தேதி பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், நிர்வாகி லக்கி முருகனுக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: