மாமல்லபுரம் அரசு மருத்துவமனை அருகே காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி: சீரமைக்க கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அரசு மருத்துவமனை அருகே பல மாதங்களாக குழாய் இல்லாமல் காட்சி பொருளாக உள்ள குடிநீர் தொட்டி உள்ளது. உடனே சரி செய்து பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும்  சாலையையொட்டி பூஞ்சேரி என்ற இடத்தில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏற்பட்டால் காயமடைந்தவர்களை முதலுதவி சிகிச்சையளிக்க இந்த மருத்துவமனைக்கு கொண்டு வருவர். பின்னர் மேல் சிசிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பர்.

இந்த மருத்துவமனைக்கு மாமல்லபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் தினந்தோறும் வந்து பல்வேறு நோய்களுக்காக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையையொட்டி ஒரு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதனை நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் விட்டதால் அதில் இருந்த குழாய்கள் சேதமடைந்து, தற்போது குழாய் இல்லாமல் காட்சி பொருளாக பார்க்கப்படுகிறது.

மேலும் குடிநீர் தொட்டி அருகே உள்ள மின் இணைப்பு பெட்டி துருப்பிடித்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். மேலும் பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: