கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயணம் மூலம் பழுக்க வைத்த 15 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்: 50 கடைகளுக்கு நோட்டீஸ்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் உணவுபொருள் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரசாயனம் மூலமாக பழுக்க வைத்த 15 டன் வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 50க்கும் மேற்பட்ட கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இங்குள்ள பழ மார்க்கெட்டில் சிலர்  ரசாயனங்கள் மூலமாக செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதாக உணவுபொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இவ்வாறு பழுக்க வைக்கப்படும் பழங்களால் மக்களுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகளும் ஏற்படுவதும் தெரியவந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5:30 மணியளவில் சென்னை மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன், அதிகாரி சுந்தரமூர்த்தி தலைமையில் 7 பேர் குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், பல கடைகளில் ரசாயனம் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைத்த 15 டன் வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்  ஒட்டப்பட்டது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உணவு பாதுகாப்பு சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறை விதிகள் 2011ன்படி கால்சியம் கார்பைடு கற்கள் மூலம் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் உணவால் உபாதை, வயிற்று போக்கு உள்ளிட்ட அஜீரண கோளாறுகள் ஏற்படுவதுடன், புற்றுநோய்க்கு ஒரு காரணியாகவும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவங்களில் வியாபாரிகள் ஈடுபடுவது குற்றமாகும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: