மத்திய அரசின் புதிய திட்டத்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதில் பாதிப்பு ஏற்படும்: மின்வாரிய தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு

சென்னை: மத்திய அரசின் யாரிடம் இருந்து வேண்டுமானாலும் மின்இணைப்பு பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டத்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதிலும், மக்களுக்கு சலுகை விலையில் இணைப்பு கொடுப்பதிலும் பாதிப்பு ஏற்படும் என தொழிற்சங்கத்தினர் கூறியுள்ளனர். மின்சாரத்துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பல்வேறு சீர்த்திருந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ₹3.5 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. மேலும் மின்விநியோகத்தில் தனியாருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மின் விநியோக நிறுவனங்கள் இணையே போட்டிய ஊக்குவிப்பதன் மூலம் நுகர்வோருக்கு சிறப்பான சேவை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட விநியோக நிறுவனங்களிடமிருந்து நுகர்வோர்கள் தங்களுக்கு தேவையான மின்விநியோக நிறுவனத்தை தேர்வு செய்ய மாற்று வழிகள் ஏற்படுத்தப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் இவ்வாறு யாரிடம் இருந்து வேண்டுமானாலும் மின்இணைப்பு பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டத்தால்,  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதிலும், மக்களுக்கு சலுகை விலையில்  இணைப்பு கொடுப்பதிலும் பாதிப்பு ஏற்படும் என தொழிற்சங்கத்தினர்  கூறியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர், தொழிலாளர் ஐக்கிய சங்கத்தின் பொதுச்செயலாளர் சுப்ரமணியன் கூறியதாவது: மின்சாரவாரியத்தில் கடந்த காலத்தில் மின்உற்பத்தி, விநியோகம், டிரான்ஸ்மிஸன் ஆகிய அனைத்தும் தனியார்களிடமிருந்து கைப்பற்றி அரசுத்துறையாக மாற்றினார்கள்.

அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளாக மின்உற்பத்தியை தனியாரிடம் வழங்கி வந்தனர். மின்தொடரமைப்பு மற்றும் மின் விநியோகம் மின்வாரியத்தின் கையிலேயே உள்ளது. மின்உற்பத்தியை பொறுத்தவரை மின்சாரவாரியம், தனியார் மற்றும் மத்திய அரசிடம் உள்ளது. அதேநேரத்தில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டதிருத்தத்தின் மூலமாக மின்விநியோகத்தை பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் வழங்குகிறோம் என்று கூறுகின்றனர். பொதுமக்கள் எங்களுக்கு மின்வாரியத்தின் இணைப்பு வேண்டாம், சம்மந்தப்பட்ட பகுதியில் மின்இணைப்பு வழங்குவதற்கு அனுமதி பெற்ற நிறுவனங்களில் இருந்து மின்சார இணைப்பை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தால், அதற்கான அனுமதி வழங்கப்படும். இவ்வாறு கோரிக்கை வைத்த ஒருமாதத்தில், அவ்வாறு கூறியவரின் அனைத்து விபரங்களும் தனியார் நிறுவனத்திற்கு சென்றுவிடும்.

அதன்பிறகு சம்மந்தப்பட்டவருக்கு இணைப்பு வழங்குவது, மின்கட்டணம் வசூல் செய்வது, இணைப்பை பராமரிப்பது போன்ற அனைத்து விஷயங்களையும் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளும். அப்போது கூடுதல் இணைப்பு வழக்கும் விநியோகர் என்ற நிலை தனியார் நிறுவனங்களுக்கு ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலை வந்தால் ஏராளமான போட்டி வரும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் போட்டிக்கு பதிலாக மின்சாரத்துறையை பலவீனமாக்கும். பொருளாதார ரீதியாக அதிக தொகை கொடுத்து மின்சாரத்தை வாங்கக்கூடியவர்களுக்கு தான் முக்கியத்துவம் வழங்கப்படும். பெரிய ெதாழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்கள் போன்ற அதிகமான மின்சாரத்தை பயன்படுத்தக்கூடிய பெரிய நிறுவனங்களை, மின்விநியோகம் செய்வதற்காக அனுமதிபெற்றுள்ள நிறுவனங்கள் தங்கள் பக்கத்திற்கு இழுத்துவிட்டால், மின்வாரியத்திற்கு வரக்கூடிய வருவாய் பெருமளவில் பாதிக்கப்படும்.

சுத்தமாக இல்லாமல் போய்விடும். இப்படி ஒருசூழ்நிலை ஏற்பட்டு விட்டால், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத நிலை ஏற்படும். பெரிய நிறுவனங்கள் மூலமாக கிடைக்கும் வருவாயை வைத்துத்தான் விவசாயத்திற்கு இலவசமாக மின்இணைப்பு வழங்கப்படுகிறது. வீடுகளுக்கு மானிய விலையில் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோர்கள் தனியாரிடம் சென்றுவிட்டால், சலுகை விலையில் மின்சாரம் வழங்குவதிலும், இலவசமாக மின்சாரம் வழங்கவதிலும் பாதிப்பு ஏற்படும். அனைவருக்கும் பணம் கட்டினால் தான் மின்சாரம் கிடைக்கும் என்ற நிலை ஏற்படும்.

மேலும் தனியார் உள்ளே வந்துவிட்டால் ப்ரிபெய்டு முறையில் மின்சாரத்தை விநியோகிக்கும் முறையை கொண்டுவந்து விடுவார்கள். செல்போனில் எப்படி முதலில் பணம் கட்டினால் தான் சேவை வழங்கப்படுகிறதோ, அதேபோல முதலில் பணம் கட்டினால் தான் மின்சாரம் கிடைக்கும். எப்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நடந்ததோ அதேநிலை மின்வாரியத்திலும் நடந்துவிடும். அதற்காகத்தான் மத்திய அரசின் இந்த கொள்கை முடிவு. எனவேதான் தொழிற்சங்கத்தினர் தனியார் வரக்கூடாது என போராடி வருகிறோம். கடுமையாக எதிர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: