அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி தமிழகத்தில் கலவரத்தை அரங்கேற்ற சசிகலா, டிடிவி.தினகரன் திட்டம்

சென்னை: சென்னை டிஜிபி அலுவலகத்தில் அதிமுகவினர் 2வது தடவையாக புகார் மனு அளித்தனர். அதன் பிறகு அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டி: சசிகலா சென்னைக்கு வருவதால் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. அமமுக பணியை அவர் மேற்கொள்ளட்டும். ஆனால் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அதிமுக கொடியுடன் தான் சசிகலா சென்னைக்கு வருவார். இதற்கு எதிராக டிஜிபியிடமோ, முப்படை தளபதிகளிடமோ மனு கொடுத்தாலும் எங்களை தடுக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். அதுமட்டுமில்லை, ‘பெங்களூருவில் சசிகலாவின் ஆதரவாளர்கள் 100 பேர் நாங்கள் மனித வெடிகுண்டுகளாக மாறி தமிழகத்துக்கு வருவோம்’ என்று மிகப்பெரிய அச்சுறுத்தலை, கொலை மிரட்டலை விடுத்துள்ளார்கள்.

எனவே தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், தமிழக மக்களின் உயிர், சொத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், மக்களிடையே மோதலை தூண்டும் வகையிலும் சசிகலாவும், டி.டி.வி.தினகரன், அவரை சார்ந்தவர்களும் மிகப்பெரிய சதி திட்டத்தை தீட்டி உள்ளனர். அதிமுக தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில், ‘அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் இ.மதுசூதனன் ஆகியோர் தலைமையிலான அதிமுக தான் உண்மையானது. அவர்களுக்கு தான் இரட்டை இலை சின்னம் சொந்தம் என்று இறுதி தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் ஜெயலலிதா வழியில் 4 ஆண்டுகளாக அதிமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில், ஊரை அடித்து 4 ஆண்டு காலம் சிறையில் இருந்த சசிகலா, சிறையில் இருந்து வந்து நாங்கள்தான் அதிமுக என்று சொல்லி, நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலை செய்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் கலவரத்தை அரங்கேற்றிவிட்டு, அந்த பழியை அதிமுக மீது போடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். ஆகவே இந்த திட்டத்தை தடுக்க வேண்டும். இதற்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்காகவும், அதிமுக பெயர், கொடியை பயன்படுத்தி தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட இருக்கிற சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் இருந்து தமிழகத்தையும், தமிழக மக்களையும், சொத்துகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக  டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு  அவர் கூறினார்.

Related Stories: