சசிகலா தமிழகத்திற்கு வருவதையொட்டி சென்னையில் பேரணி நடத்த அனுமதி கேட்டு கமிஷனரிடம் மனு: சரியான தகவல்கள் இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பியதாக தகவல்

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா விடுதலையாகி பெங்களூருவில் தங்கியுள்ளார். நாளை (8ம் தேதி) சசிகலா தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சசிகலா தமிழகத்திற்கு வரும் போது அமமுகவினர் சார்பில் தமிழக எல்லையான ஓசூரில் இருந்து பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை போரூரில் தொடங்கி மெரினா, காமராஜர் சாலையில் முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரை சுமார் 12 இடங்களில் பேரணி நடத்த அமமுக கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் சென்னையில் கொரோனா பரவல் காரணமாக பேரணி, போராட்டம் போன்றவை அனுமதியின்றி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணி நடத்த அனுமதி கேட்டு அமமுக சார்பில் அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளித்ததாகவும், மனுவை பரிசீலித்து முடிவு தெரிவிப்பதாக காவல் ஆணையர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தவுடன் அவரது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்து, சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சசிகலா தமிழகத்திற்கு வரும்போது பல்வேறு இடங்களில் அதிமுக கொடியை பயன்படுத்த அமமுகவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பேரணி நடத்த அனுமதி கேட்டு மனு அளித்த நிலையில், மனுவில் சரியான தகவல்கள் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: