ஆட்டோ மொபைல், ரியல் எஸ்டேட் தொழில் பாதிப்பே சிறு,குறு தொழிலுக்கு பேரிடியாக விழுந்தது: இந்திய தொழில் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் கே.இ.ரகுநாதன்

நமது நாட்டை பொறுத்தவரையில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பலவிதமாக இருக்கும். இந்த தொழில் ஒரு சாராருக்கு மட்டும் சார்ந்தது இல்லை. ஒரு தொழிற்சாலை செயல்பாட்டில் பலம் என்பது சிறு, குறு தொழிலில்தான் இருக்கும். அவர்கள் தான் அடித்தளம். கடந்த 2016ல் திடீரென்று ஒரு நாள், ஒரு இரவு மத்திய அரசு 86 சதவீத பண பரிவர்த்தனையை ரத்து செய்கிறது. நிறைய பேர் டிஜிட்டல் பழகவில்லை. பாரம்பரிய முறைப்படி தொழில் செய்தவர்களால் திடீரென்று அதை உடனடியாக ஏற்க முடியவில்லை. பணமதிப்பிழப்பு பாதிப்பில் இருந்து வெளியே வருவதற்குள் ஜிஎஸ்டி வரி என்கிற பாம் ஒன்று வருகிறது. இது இன்னும் நிலை குலைய செய்கிறது.

மூன்றாவதாக பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்தது. இதனால், பாதிக்கப்பட்டது ஆட்டோ மொபைல் தொழில். மற்றொன்று ரியல் எஸ்டேட் தொழில்தான். ஆட்டோ மொபைல் தொழிலுக்கு தேவையான உதிரிபாகங்கள், சிறு,குறு தொழில் நிறுவனங்களில் இருந்துதான் வரும். முன்பெல்லாம் அம்பத்தூர் எஸ்டேட் உருவானதற்கு காரணமே ஆட்டோ மொபைல் தொழில் தான். அதே மாதிரி இருங்காட்டுக்கோட்டையிலும் வந்தது. ரியல் எஸ்டேட் தொழிலிலும் பலர் உள்ளனர். டைல்ஸ் பொருத்துவது, கருவிகள் வைப்பது, கம்பிகள் கட்டுவது, சிவில் கட்டுமான பணி என அனைத்திலும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இருக்கும்.

இந்த 2 தொழில்களில் ஏற்பட்ட பாதிப்பு சிறு, குறு தொழிலுக்கு பேரிடியாக விழுந்தது. இந்த சூழலில் கொரோனாவின் தாக்கம் வந்தது. இது பலரை மீண்டும் ஜீரோவுக்கு கீழ் கொண்டு வந்தது. 10 மாத காலம் வீட்டில் இருந்தோம். இந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் இப்போது என்ன வருவாய் ஈட்டுகிறார்களோ, அந்த மாதம் வரை செலவு செய்ய முடியும். வருமானம் இல்லாமல் போனவர்களுக்கு அந்த வருமானத்தை ஈடுகட்ட என்ன வழி என்று பார்க்க வேண்டும். நாடு முழுவதும் 50 ஆயிரம் சிறு,குறு தொழிற்சாலைகளில் ஆய்வு ஒன்றை நாங்கள் கடந்தாண்டு ஜூனில் எடுத்தோம். அப்போது, ஊரடங்கு ஏப்ரல், மே, ஜூன் என்று போய் கொண்டிருக்கிறது.

உங்களால் தாக்குப்பிடிக்க முடிகிறதா, இன்னும் எவ்வளவு நாள் தாக்குபிடிக்க முடியும் என்று கேட்ட போது, அன்றைய சமயத்தில் 30 சதவீதம் சிறு,குறு தொழில் முனைவோர்கள் மேற்கொண்டு தொடர முடியாது என்று நினைத்தனர். நிறைய அறிவுரைகள் அரசுக்கு கொடுத்தோம். ஆனால், சிறு,குறு தொழிலுக்கு எதுவும் செய்யவில்லை. இதுவரை மத்திய அரசிடம் சலுகைகள் என்று பார்த்தால் 3 சலுகைகள்தான். ஒன்று 3 லட்சம் கோடிக்கு கடன் தருவது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லோன் கிடைக்காது. கிடைத்தவர்களுக்கு அந்த அளவு பத்தாது. கடனே வாங்காமல் இருந்த தொடக்க நிறுவனங்களுக்கு இந்த கடன் கிடைக்காது. அந்த கடன் வாங்க தகுதியிலேயே பலர் காணாமல் போய் விட்டனர்.

அரசு 50 லட்சம்  தொழில் நிறுவனங்களுக்கு இந்த கடன் உபயோகரமானதாக இருக்கும் என்றது. ஆனால், மொத்தம் 7 கோடி நிறுவனங்கள் உள்ளன. 50 லட்சம் நிறுவனங்களுக்கு தான் உதவி போகும் என்றால் மீதமுள்ள நிறுவனங்கள் என்னவாகும் என்பதுதான் எங்களது கேள்வி. இரண்டாவது, பண்ட் ஆப் பண்ட் என்று கொடுத்தார்கள். நடுத்தர நிறுவனங்களுக்கு தான் உதவியாக இருக்கும். மூன்றாவதாக, ரீ ஸ்டெக்சுரிங் ஆப் லோனை பயன்படுத்தலாம் என்றனர். ஆனால், 5 சதவீத நிறுவனங்கள் கூட அந்த லோனை பயன்படுத்த முடியவில்லை. இது மாதிரியான சூழ்நிலையில், தற்போது பழைய மார்க்கெட் நோக்கி வருகின்றனர்.

இந்த தொழில் ஸ்பிரிங் மாதிரி தான். ஸ்பிரிங்கை அடங்க வைத்து ரிலீஸ் பண்ணால் ஜம்ப் பண்ணிதானே வரும். அக்டோபரில் ஸ்பிரிங்கை ஓபன் செய்துள்ளனர். அப்போது இருந்த தேவையால் தொழில் பழையபடி உள்ளது. காரணம், நாங்கள் மார்ச்சில் மூடினோம். அப்போது பெண்டிங் ஆர்டர் இருந்தது. அது எல்லாம் அக்டோபரில் வெளியே போக ஆரம்பித்து விட்டது. இதனால், ஜனவரி வரை நாங்கள் ஓட்டி விட்டோம். இப்போது 100 பேர் இருக்கும் இடத்தில் 60 பேர் தான் உள்ளனர். இப்போது கம்பெனி 30 பேர் இல்லாததால் அது கம்பெனிக்கு தான் லாபம். 30 சதவீதம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் நம்மிடம் இல்லை.

இதை தான் அரசிடம் தெரிவித்தோம். 30 சதவீதம் பேர் தொழில் நடத்த முடியாமல் உள்ளனர். அவர்களை நோக்கி உங்கள் பார்வை திரும்ப வேண்டும். அவர்களை 3 வகையாக பிரித்துக் கொள்ளலாம். இனிமேல் நடத்த  முடியாது என்று மூட நினைத்தவர்கள், அது மாதிரி வெளியில் வர நினைப்பவர்களுக்கு வெளியில் வர அரசு அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் வெளியில் வந்து இன்னொரு தொழிலை செய்ய வேண்டும். ஒரு தொழில் முனைவோர் உழைப்பு வீணாகி விடக்கூடாது. இரண்டாவது அடி வாங்கினாலும் பரவாயில்லை. எனக்கு ஆர்டர் இருக்கிறது.

பிசினஸ் இருக்கிறது. எனவே, பணம் கிடைத்தால் நன்றாக இருக்கும். அவர்களுடையே பிரச்னையை வேறுவிதமாக தீர்க்க வேண்டும். நாம் நல்லதாக இருக்க வேண்டும். ஆனால், இந்த பிசினசை விட்டு விட்டு வேறு பிசினஸ் செய்யப்போகிறேன். அதற்கு முதலீடு செய்ய வேண்டும். மார்க்கெட்டிங் செய்ய வேண்டும். அவர்களுக்கு நீண்டகால முதலீடு வழங்க வேண்டும். அதை நாம் ஏற்படுத்த தவறி விட்டால் அவர்களது உழைப்பு வீணாகி போய் விடும். இதில், என்ன பாதிப்பு என்று பார்க்கும் போது வேலைவாய்ப்பின்மை ஏற்படும். 30 சதவீதம் தொழிற்சாலைகளில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று அர்த்தம் இல்லை. இந்த நிறுவனம் வளர்ந்து இருக்கும் பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 30 சதவீத நிறுவனங்கள் 20 கோடி பேருக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி இருக்கும். நாம் புதிதாக தொழில் நிறுவனம் தொடங்கி விட முடியாது. மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தின்படி 30 ஆயிரம் தொழிற்சாலைகள் அடுத்த 5 ஆண்டுகளில் தொடங்கப்படும் என்று கூறுகின்றனர். அவ்வளவு எளிதாக இந்த தொழிற்சாலையை ஆரம்பித்து விட முடியாது. இருக்கிறவங்களை காப்பாற்றுவது தான் நலம். கையில் இருக்கும் ஒரு புறா, இரண்டு புறாக்களை விட சிறந்தது என்கிறோம். கையில் இருக்கும் புறாவை காப்பாற்ற தவறுகிறோம். நாங்கள் ரொம்ப ஆவலோடு எதிர்பார்த்தோம்.

இந்த பட்ஜெட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிப்பு வரும் என்று நினைத்தோம். பட்ஜெட்டில் அறிவிப்புகள் நிறைய இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் என்ன பண்ண போகிறோம் என்று இருக்கிறது. ஆனால், இன்று பசியோடு இருப்பவர்களுக்கு என்ன உணவு தரப்போகிறோம் என்று கேட்க தோன்றுகிறது. 30 சதவீத மக்கள் கஷ்டப்படுகின்றனர். ஊதியம் குறைந்து போய் விட்டது. வருடத்திற்கு 30 சதவீதம் அதிகமாக ஊதியம் வழங்குபவர்கள் குறைந்த ஊதியம் வாங்குகின்றனர். அவர்களால் வட்டி கிடைக்காமல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை தான் உள்ளது.

ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் மாணவர்கள் டிகிரி படித்து முடித்து வருகின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்பு இல்லை. அவர்கள் எதை நோக்கி செல்வார்கள். ஆட்குறைப்பு காரணமாக ஏற்கனவே வேலையில் இருந்தவர்களுக்கு வேலையில்லை. படித்து முடித்த இளைஞர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது. வாராக்கடனை வசூலிக்கும் வங்கிக்கு 2 லட்சம் கோடி கொடுப்பதற்கு பதிலாக, இருக்கும் கடனை அடைக்க சலுகை கொடுங்கள். இருக்கும் சொத்தை விற்று தொழில் தொடங்குபவர்களுக்கு விலக்கு கொடுங்கள். மூலபொருட்கள் தட்டுப்பாடு இருக்கிறது. அதற்கு ஒரு ரேஷன் கார்டு கொடுங்கள்.

அரசு சார்பில் மூல பொருட்களை சப்ளை செய்யுங்கள். அப்போதுதான் மார்க்கெட்டில் தாக்கம் இருக்காது. அடுத்து ஓராண்டிற்கு வருமான வரி, மின்கட்டணம், பதிவு கட்டணம், வாடகை கட்டணத்தில் இருந்து விலக்கு கொடுங்கள். நாங்கள் சம்பாதிப்பது எங்களுக்கு போதாது. நாங்கள் 10 மாதம் இழந்த வருவாயை சம்பாதிக்க வேண்டும். நாங்கள் பள்ளத்தில் இருந்து எழத்தான் பார்க்கிறோம். எங்களை கைதூக்கி விடுங்கள். ஏணியாக இருங்கள். நாங்கள் உழைத்து இருக்கிறோம் இந்த நாட்டிற்காக. நாங்களும் பாடுபட்டு இருக்கிறோம் இந்த நாட்டிற்காக. எங்களுக்கு நாடும், நாங்களும் வளர வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அது பற்றிய அறிவிப்பு தற்போது வரை வரவில்லை.

ஆனால், நாங்கள் வரும் என்று நம்புகிறோம். இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வராதது வருத்தம் அளிக்கிறது. இந்திய பொருட்களை பயன்படுத்துவோம், அதிகப்படுத்துவோம் என்ற அறிவிப்பு நன்றாக இருக்கிறது. இதை நாங்கள் பார்க்க உயிரோடு இருக்க வேண்டும். இதுதான் இந்த நாட்டின் நிலைமையாக உள்ளது. தண்ணீரில் மூழ்கிக் கொண்டு இருக்கும் எங்களை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுத்து வருகிறோம். நாங்கள் யாரை பார்த்து குரல் கொடுக்கிறோம் என்று எங்களுக்கே இப்போது தெரியவில்லை.

Related Stories: