அதிமுக-பாஜக கூட்டணி என்பது தேர்தலுக்கு பிறகு நத்தை மீனை பெரிய மீன் விழுங்கிய கதையாக தான் மாறும்: காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

* தமிழகத்திற்கு ராகுல் வருகை காங்கிரசுக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திரும்பவும் அவர் தமிழகத்திற்கு பிரசாரம் வர திட்டம் எதுவும் இருக்கிறதா?

ராகுல் பேசுகின்ற போது, தமிழ்நாட்டிற்கு வருவதால் பெரிய மனநிறைவும் மகிழ்ச்சியும் எனக்கு கிடைக்கிறது என்று சொன்னார். கோவை, ஈரோடு போன்ற மேற்கு கொங்கு மண்டலம் அதிமுகவுக்கும், பாஜவுக்கும் ஒரு வலுவான மாவட்டங்கள் என்று ஒரு பெயர் இருக்கிறது. ஆனால், அந்த மாவட்டங்களில் ராகுலுக்கு எழுச்சியான வரவேற்பிருந்தது. இன்னும் 3 அல்லது 4 முறையாவது வர வாய்ப்பு உள்ளது.

* வர உள்ள சட்டமன்ற தேர்தலில் என்ன பிரச்னை எதிரொலிக்க அதிக வாய்ப்பு உள்ளது?

சமுக நீதி, மதநல்லிணக்கம், மனித நேயம், எல்லாரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி. இந்த தத்துவம் எல்லாம் இந்த மண்ணில் ரொம்ப செழுமையாக வளர்த்திருக்கிறது. இதற்கு ஆபத்து வந்திருக்கிறது. இந்த ஆபத்து அதிமுக, பாஜ கூட்டணி மூலமாக வருகிறது என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இடஒதுக்கீடு, சமூகநீதி, மதநல்லிணக்கம், எல்லாரையும் உள்ளடக்கிய ெபாருளாதார வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் மூலமாக பெற்றிருக்கிற நன்மைகள், வளர்ச்சியை எல்லாவற்றையும் மொத்தமாக இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறார்கள். அதனால், அந்த மாதிரி விஷயங்கள் எதிரொலிக்கும். பாஜக, அதிமுக கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

* சட்டசபை தேர்தலில் இந்த முறை நீங்கள் போட்டியிடுகிறீர்களா?

போட்டியிடுவது என்பது  கட்சி முடிவு செய்ய வேண்டிய விஷயம். நிறைய இளைஞர்கள் சட்டமன்றத்திற்கு வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்களை வழிகாட்டுவதற்கு சில அனுபவஸ்தர்கள் தேவை. அப்படியிருந்தால் அது அவர்களுக்கு நல்ல காமினேஷனாக இருக்க முடியும். மொத்தத்தில் இளைஞர்கள் நிறைய பேர் வர வேண்டும். கட்சிக்கு என்ன பணி தேவைப்படுகிறது என்று நினைக்கிறார்களோ அந்த பணியை செய்வேன். நானாக எதையும் கேட்பதாக இல்லை. நம்மை பயன்படுத்தி கொள்ள வேண்டியது கட்சி.

* தமிழகத்தில் ஆளுங்கட்சியின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

அதிமுக இன்றைக்கு முழுமையான அரசியல் அடையாளங்களை இழந்து விட்டது. அதிமுக அமைச்சர்கள் 20, 25 பேரை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால், அவர்கள் பாஜவை தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு அழைத்து வருகிறார்கள். சின்ன கட்சியாக தான் பாஜகவினர் வரபோகிறார்கள் என்று அதிமுகவினர் நினைக்கலாம். நத்தை மீன் என்று ஒன்று உண்டு. அந்த மீனை பெரிய மீன் விழுங்கி விட்டால், அந்த மீன் உள்ளே இருந்தே அந்த மீனை சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்.

பாஜ எங்கெங்கே எல்லாம் மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்ததோ - அது பீகாராக இருந்தாலும் சரி, தெலங்கானாவாக இருந்தாலும் சரி - அந்த இடங்களில் எல்லாம் ஒரு தேர்தலில் மட்டும் தான் அவர்களை வைத்திருக்கிறார்கள். மறு தேர்தலில் அவர்களை விழுங்கி விடுகிறார்கள் அல்லது நீர்த்து போக செய்து விடுகிறார்கள். அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி முடிந்த பிறகு பாஜ முழுமையாக, அதிமுக இடத்தை எல்லாம் எடுத்து கொள்வார்கள் என்று தான் கருதுகிறேன். பாஜ ஒரு தேர்தலுக்காக திட்டம் போடும் கட்சி அல்ல. அவர்கள் வரும் போதே 10 ஆண்டு திட்டத்தோடு தான் வருகிறார்கள். அந்த அடிப்படையில் அதிமுகவின் அடித்தளத்தை அப்படியே தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள். 

Related Stories: