மார்த்தாண்டம் காந்தி மைதானம் பேருந்து நிலைய நிழற்குடை அமைக்கப்படுமா?.. சுட்டெரிக்கும் வெயிலில் கால்கடுக்க நிற்கும் அவலம்

மார்த்தாண்டம்: குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக பெரிய வர்த்தக நகரம் மார்த்தாண்டம் ஆகும். இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தென்கேரள மாநில பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்களும் விவசாயிகளும் வருகின்றனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும்பாலும் பேருந்துகளில் தான் மார்த்தாண்டம் வருகின்றனர். நகர பகுதி முழுவதும் வாகனங்களின் இயக்கம் அதிகமாக காணப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை குறைப்பதற்காக 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் பேருந்து நிலையம் செல்லும் பஸ்கள் மேம்பாலத்தில் செல்லலாம்.

ஆனால் ேபருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் பாலத்துக்கு கீழ் உள்ள சாலை வழியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது நாகர்கோவில் செல்லும் ேபருந்துகளும் மேம்பாலம் வழியாகத்தான் செல்கின்றன. இதனால் காந்தி மைதானத்தில் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகள் ஏறி செல்கின்றனர். அதுபோல் குலசேகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரும் மக்களும் இந்த பேருந்து நிறுத்ததில் தான் நிற்கின்றனர். இதனால் காந்தி மைதானத்தில் உள்ள ேபருந்து நிறுத்தம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.

அதிக மக்கள் பயன்படுத்தும் இந்த பேருந்து நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைக்கவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்து நிற்கும் மக்கள் மழையிலும், வெயிலிலும் நனைந்து தான் நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் சிலர் சாலையோரம் உள்ள கடைகளுக்கு முன் நிற்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கும், பஸ் பயணிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. மேலும் சில பிரச்னைகளும் ஏற்படுகின்றன. பேருந்துக்காக வயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகளும் வருகின்றனர். இவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்பதால் அவர்கள் பல்வேறு உடல் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.

பஸ் பயணிகளுக்கு ஏற்படும் இதுேபான்ற பிரச்னைகளை தவிர்க்க காந்தி மைதானம் பேருந்து நிறுத்தத்துக்கு உடனடியாக நிழற்குடை அமைக்க வேண்டும். மேலும் பேருந்து கால அட்டவணையும் அங்கு வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: