தமிழக அமைச்சர்களின் பினாமி நிறுவனமா?.. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பாஷ்யம் கட்டிட நிறுவனத்தின் பெயர்: தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு தனியார் கட்டிட நிறுவனத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் பலர் அந்த நிறுவனத்தில் மறைமுகமாக முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த நிறுவனத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையில் 45 கி.மீ தூரத்தினாலான முதல் வழித்தடத்தில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. தற்போது வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. வரும் 14ம் தேதி இவ்வழித்தடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், முதல் வழித்தடத்தில் உள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அது அமைந்துள்ள இடத்தை பொறுத்து பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில், சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் ‘அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையம்’ எனவும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் ‘புரட்சி தலைவர் எம்ஜிஆர் மெட்ரோ நிலையம்’ எனவும், கோயம்பேடு புறநகர் மெட்ரோ நிலையம் ‘ஜெயலலிதா மெட்ரோ நிலையம்’ எனவும் கடந்த ஆண்டு தமிழக அரசு பெயர் மாற்றம் செய்தது.

இந்நிலையில், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் மேம்பாலங்களில் கடந்த 3ம் தேதி இரவோடு இரவாக ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என பெயர் மாற்றப்பட்டு எழுதப்பட்டிருந்தது.

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய மேம்பாலங்களில் இந்த பெயர் திடீரென வைக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அரசியல் கட்சிகள் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டன. மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த பாஷ்யம் கட்டிட நிறுவனம், தமிழக அரசியல் விஐபிகளுக்கு நெருக்கமான நிறுவனம். பல அமைச்சர்கள் மற்றும் விஐபிக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த நிறுவனம், சென்னையில் மேற்கொள்ளும் கட்டிடப் பணிகளுக்கு சிஎம்டிஏ அலுவலகத்தில் எந்தவித தடங்கலும் இல்லாமல் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தின் அதிகாரிகளும், சர்வ சாதாரணமாக சிஎம்டிஏ அதிகாரிகளை சந்தித்து காரியம் சாதித்து வந்தனர். இந்த முக்கியமான நிறுவனத்தின் பெயர் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வைக்கப்பட்டுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், கோயம்பேட்டை தொடர்ந்து மேலும் 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் தனியார் நிறுவனங்களின் பெயர்களை வைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பச்சையப்பா, சைதாப்பேட்டை, ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 3 தனியார் வங்கியின் பெயர்களையும், ஏஜி-டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பிரபல நகைக்கடையின் பெயரையும், உயர் நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஒரு எண்ணெய் நிறுவனத்தின் பெயரையும் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: