சர்வதேச கவனத்தை ஈர்த்த போராட்ட ஆதரவு கருத்து; கிரேட்டாவின் டுவிட் பதிவு பின்னணியில் இருப்பது யார்?.. கூகுள் நிறுவனத்துக்கு டெல்லி போலீசார் கடிதம்

புதுடெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்த ஆவணங்களின் விபரங்கள் கோரி, கூகுள் நிறுவனத்திற்கு டெல்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஸ்வீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். விவசாயிகளுக்கு உதவ நினைப்பவர்கள் செய்ய வேண்டியவை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்ட கட்டுரையின் ஆவணம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.

பின்னர், கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அந்த கட்டுரையை நீக்கினார். இந்நிலையில் அந்த டுவிட்டர் பதிவில் வெளியிடப்பட்ட ஆவணங்களின் பின்னணி மற்றும் இதில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது பற்றிய விவரங்களை கிரேட்டா ஷேர் செய்த ஆவணத்தை முதலில் பதிவு செய்தவரின் கணக்கு விவரம், மின்னஞ்சல், சமூகவலைதள கணக்கு ஆகிய விவரங்களை கூகுளிடம் டெல்லி காவல்துறை கோரியுள்ளது. கிரேட்டா தன்பர்க் பகிர்ந்த பதிவு குறித்து, குற்றச்சதி, மக்களிடையே விரோத உணர்வை ஏற்படுத்தியதாகக் கூறி டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். ஆனால், அந்த எப்ஐஆரில் கிரேட்டாவின் பெயர் குறிப்பிடவில்லை.

இதற்கிடையே இந்தியாவில் போராடும் விவசாயிகளும், அரசும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் அவைக்கான மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அந்த அமைப்பு, ‘அமைதியாக கூடுவதற்கும், தங்களது கருத்துகளை தெரிவிப்பதற்கும் ஆன்-லைனிலும், ஆப் லைனிலும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். மனித உரிமையை பாதுகாக்கும் வகையில் சரியான தீர்வை எட்டுவதும் முக்கியம்’ என்று கூறியுள்ளது.

Related Stories: