கல்குவாரி விபத்தில் மேலும் ஒருவர் பலி இழப்பீடு கோரி உறவினர்கள் மறியல்: உரிமையாளர்கள் மீது வழக்கு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் கல்குவாரிகள் இயங்குகின்றன. இங்குள்ள ஒரு குவாரியில் கற்களை பெயர்த்தெடுக்கும் பணிக்காக நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரங்களை எடுத்து கொண்டு 11 பேர் சுமார் 250 அடி ஆழ பள்ளத்துக்கு சென்றனர். அப்போது, பள்ளத்திற்கு அருகே இருந்த மலையில் இருந்து திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில், நத்தாநல்லூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (22), மண் சரிவில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். வடமாநிலத்தை சேர்ந்த சுரேஷ் (22), தமீம் அன்சாரி (30) ஆகியோர் படுகாயமடைந்தனர். மீதமுள்ள 8 பேரும் அலறியடித்து கொண்டு வெளியேறினர். தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், தமீம் அன்சாரியை, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். சுரேஷுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து, சாலவாக்கம் போலீசார் கல்குவாரியில் பணியாற்றிய  சூபர்வைசர் சுரேஷ், மேஸ்திரி வேலு, கல்குவாரி உரிமையாளர் சரத்  ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், மண் சரிவில் சிக்கி உயிரிழந்த மணிகண்டனின் உறவினர்கள், உரிய இழப்பீடு கோரி திருமுக்கூடல்   பஸ் நிலையம் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த சாலவாக்கம்  போலீசார், அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நட்ததினர். இதையடுத்து,  அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.

தடைவிதிக்க வேண்டும்

மதூர் கல்குவாரிகளில் அதிக சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால், சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகள் சேதமடைவதுடன் தொட்டிலில் தூங்கும் குழந்தை பயத்தில்  அழுகிறது. ஆடு, மாடு உள்ளிட்டவை கயிற்றை அறுத்து கொண்டு ஓடுகின்றன. கல்குவாரிகளில் இருந்து வெளியேறும் தூசியால் சுவாச கோளாறு ஏற்படுகிறது. விதிகளைமீறி பல நூறு அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, கல்குவாரி செயல்பாட்டை நிறுத்த வேண்டும். இதுபற்றி அதிகாரிகளுக்கு புகார்கள் அளித்தால் அவர்கள் கண்டுகொள்வதே இல்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

எச்சரிக்கை

மண் சரிவில் 10 லாரிகள் மற்றும் 2 பொக்லைன் இயந்திரங்கள் ஆகியவை சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப்படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் செயல்படுகின்றனர். நேற்று  காலை தொடங்கி மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கல்குவாரியில் திடீர் திடீரென மண்சரிவு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: