வீட்டு வசதி வாரிய பொறியாளர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்: லஞ்சஒழிப்பு துறையில் பரபரப்பு புகார்

சென்னை:  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கண்காணிப்பு பொறியாளர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பரபரப்பு புகார் மனு கொடுத்துள்ளது.  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட டெண்டர்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதால் கண்காணிப்பு பொறியாளர் மீது உரிய விசாரணை நடத்த அரசு தலைமைச் செயலாளர், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் ஆகியோருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பூச்சிமுருகன் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை அண்ணா சாலை நந்தனம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக கட்டிடம், ஈவெரா பெரியார் கட்டிடம் ஆகியவை சென்னை நகரின் முக்கிய இடமாக உள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கண்காணிப்பு பொறியாளர் 13.1.2021ம் தேதி வெளியிட்ட டெண்டரில், நந்தனம் பகுதியில் ரூ.486 கோடியே 50 லட்சம் செலவில் உயர் பாலத்துடன் கூடிய டவர் 1, டவர் 2, டவர் 3 கட்டுவதற்கான டெண்டர் கோரப்பட்டு இருந்தது. இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட டெண்டர்கள் 18.2.2021ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த டெண்டர்கள் அதேநாளில் 3.30 மணிக்கு பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஆவணங்கள் 29.1.2021ம் தேதி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏற்கனவே இருந்த கட்டிடங்களை இடிப்பதற்காக, நிர்வாக பொறியாளர் 12.1.2021ம் தேதி டெண்டர் கோரி இருந்தார். இதற்கான விண்ணப்பங்கள் 18.1.2021ம் தேதி முதல் 27.1.2021ம் வரை கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த டெண்டர் குறித்த ஆவணங்களை டெண்டர் புல்லட்டில் வெளியிடாமல், மற்றவர்களை தடுத்துவிட்டு ஒருசிலருக்கு ஆதரவாக செய்யும் வகையில் டெண்டர் ஏலம் விடப்பட்டுள்ளது.

மேலும், வீட்டு வசதி வாரிய செயலாளர், வணிக வளாக திட்டத்துக்கு மட்டும் அனுமதி கொடு்த்துள்ளார். நிர்வாக பொறியாளர் கட்டிடம் இடிப்புக்கான டெண்டரை மறைமுகமாக 12.1.2021ல் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், சட்டத்துக்கு புறம்பாகவும் செய்துள்ளனர். அனுமதிக்கான ஆணையில், இந்த திட்டம் தமிழ்நாடு மின் வாரிய நிதியம் மற்றும் டிபிட்ேகா ஆகியவற்றின் அனுமதி கிடைத்த பிறகுதான் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அனுமதிகள் இதுவரை பெறவில்லை. மெட்ரோ, சிஎம்டிஏ ஏஏஐ, சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றின் அனுமதியும் பெறாமல் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இடிக்க வேண்டிய கட்டிடங்கள் உறுதியாக இருப்பதாகவும், அதை இடிக்க வேண்டியதில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், அதிகாரிகள் சிலரை சமாதானம் செய்யும் வகையிலும், இந்த கட்டிடங்களை இடிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதன் மூலம் பொதுமக்கள் நிதியில் இருந்து சட்ட விரோதமாக பயன்பெற முயற்சித்துள்ளனர்.

இதுபோல அனைத்து டெண்டர்களும் மறைமுகமாகவே செயல்படுத்தப்பட்டுள்ளது. டெண்டர் ஆவணங்கள் டெண்டர் புல்லட்டில் வெளியிடப்படவில்லை. வெளிப்படைத்தன்மை இல்லை. டெண்டர் ஆவணங்கள் அதிகாரிகளுக்கு வேண்டியவர்களுக்கும், ஆளும் அரசியல் பிரமுகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் இந்த டெண்டர்களை ஆளும் அரசியல் பிரமுகருக்கு  வேண்டிய கான்ட்ராக்டர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதுவும் அந்த டெண்டரில் குறிப்பிட்டுள்ள தொகையோ விதிகளின்படி இல்லை. இதன் மூலம் ஆளும் கட்சியினருக்கு சாதகமாக வழங்கி அதன் மூலம் பொதுமக்களின் பணம் அவர்களுக்கு செல்லும் வகையில் டெண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக டெண்டரை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பெரும் மோசடி நடந்துள்ளது. தங்களுக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர்கள் வழங்கி, பொதுமக்களின் பணத்தையும், அரசு நிதியையும் தவறான முறையில் பயன்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்த மோசடி குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: