அனைத்து மறைந்த முதல்வர்களின் வீடுகளை நினைவில்லமாக மாற்ற முடியாது : தமிழக அரசுக்கு நீதிபதிகள் குட்டு!!

சென்னை: அனைத்து மறைந்த முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இன்னும் எவ்வளவு காலத்துக்கு இது போல நினைவில்லங்கள் அமைக்கப் போகிறீர்கள் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வகை செய்யும் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் சமுதாயத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய முன்னாள் முதல்வர்கள், தலைவர்கள் என 17 பேரின் வீடுகள், நினைவு இல்லங்கள் பராமரிக்கப்படுகின்றன எனவும்,  அந்த தலைவர்கள் வாழ்ந்த வீடுகளை கையகப்படுத்தி நினைவு இல்லங்கள் அமைப்பது  புதிதல்ல எனவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது அதிகாரத்துக்கு உட்பட்டு சட்டம் இயற்றியுள்ளது.இன்னும் எவ்வளவு காலத்துக்கு இது போல நினைவில்லங்கள் அமைக்கப் போகிறீர்கள்?  அனைத்து மறைந்த முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது. இது தொடர்ந்தால் துணை அமைச்சர்களின் வீடுகளும் மாற்றப்படும் போலிருக்கிறது. பல நீதிபதிகளும் நீதித்துறைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு சிலை அமைக்க நீதிமன்ற வளாகத்தில் இடமில்லை. தமிழக அரசின் செயல்பாட்டை நியாயப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.பின்னர், தீபக்கின் மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.தமிழக அரசு

Related Stories: