செங்கோட்டையில் கொடியேற்றிய விவகாரம் நடிகர் தீப் சித்து குறித்து தகவல் தந்தால் ரூ.1 லட்சம்: டெல்லி போலீஸ் அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் அத்துமீறி நுழைந்து சீக்கிய மதக் கொடியை ஏற்றிய நடிகர் தீப் சித்து, குறித்து தகவல் தருவோருக்கு டெல்லி போலீஸ் ரூ.1 லட்சம் சன்மானம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது டெல்லி போலீசாரின் நிபந்தனையை மீறி, செங்கோட்டைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர், அங்கு சீக்கிய மதக்கொடியை நாட்டினர்.

இந்த விவகாரத்தில் யார் மீது வழக்குபதிவது என்று போலீசார் குழம்பிய நிலையில், பொதுமக்களிடம் இருந்து இது தொடர்பான 1,700க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகள், வீடியோக்கள் போலீசாருக்கு கிடைத்தன. இதில், நடிகர் தீப் சித்து மற்றும் அவரது கூட்டாளிகள் செங்கோட்டையில்  சீக்கிய மதக் கொடி, சில விவசாய அமைப்புகளின் கொடியை ஏற்றுவது சிசிடிவி காமிரா பதிவில் உறுதியானது. இதன் அடிப்படையில், தீப் சித்து, அவரது கூட்டாளிகள் ஜக்ராஜ் சிங், குர்ஜோத் சிங், குர்ஜாந்த் சிங் ஆகியோரை கைது செய்ய துப்பு கொடுத்தால் தலைக்கு தலா ரூ.1 லட்சமும், போராட்டத்தை தூண்டியதான பேரில் புட்டா சிங், சுக்தேவ் சிங், ஜஜ்பீர் சிங், இக்பால் சிங் உள்ளிட்டோரை பற்றி தகவல் அளித்தால் தலைக்கு ரூ.50,000  சன்மானம் வழங்கப்படும் என்று டெல்லி போலீஸ் தலைமை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரபல அமெரிக்க பாப் பாடகி ரிகானா தனது நேற்றைய டிவிட்டரில், `விவசாயிகளின் போராட்டம்’ என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ``இது பற்றி நாம் ஏன் பேசுவதில்லை?’’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ஸ்வீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், ``இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவிக்கிறோம்’’ என உடனடியாக பதில் அளித்து ஆதரவு தெரிவித்தார். இவர்களைத் தொடர்ந்து, ஜே ஷான் என்று அழைக்கப்படும் பிரபல பாடகர் கமல்ஜித் சிங் ஜூட்டி,  நடிகை மியா கலிபா, இந்திய வம்சாவளி அமெரிக்க இயக்குனர் ரிதேஷ் பத்ரா, பாலிவுட் நடிகர்கள் ரிசா சதா, ஸ்வரா பாஸ்கர், சயானி குப்தா, டாப்ஸி, சோனு சூட் உள்ளிட்ட பிரபலங்களும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Stories: