டெல்லி காவல்துறைக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைக்க கோரி 141 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்..!

டெல்லி: டெல்லி போலீசுக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைக்கக் கோரி 141 வக்கீல்கள் சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. வன்முறைக்குப் பிறகும் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நிறுத்தப்படவில்லை. உபியில் இருந்து தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் போராட்ட களத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தை முடக்கும்வகையில்  டெல்லி போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப்பில் இருந்து டெல்லி வழியாக வரும் ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மின்சாரம், இன்டர்நெட், குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எல்லையில் வாகனங்களில் நடமாட்டத்தை தடுக்கும் முயற்சியாக பல அடுக்கு தடுப்புக்கள் போடப்பட்டுள்ளது. அங்கு கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்பட்டு, கூடுதல் தடுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலையில் ஆணிகள் பதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டால் முன்னேறி வராமல் தடுக்கும் வகையிலும், வாகனங்களின் டயர்களை பஞ்சர் செய்யும் வகையிலும் இதுபோன்ற ஏற்பாடுகளை டெல்லி போலீசார் செய்துள்ளனர்.

எல்லையில் கூட இல்லாத அளவுக்கு முள்வேலிகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லி போலீசுக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைக்கக் கோரி 141 வக்கீல்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில்; டிராக்டர் பேரணி வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக டெல்லி காவல்துறையினர் மீது வழக்கறிஞர்கள் குற்றம் சாடினர். விவசாயிகள் இருக்கும் பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டது பற்றியும் விசாரிக்க வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: