இறுதிக்கட்டத்தில் அருங்காட்சியகம் பணி: மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு தடை.!!!

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நினைவிடம் அமைக்க சுமார் ரூ.80 கோடியை தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து, 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் முடிவடைந்தது.

இதையடுத்து, பீனிக்ஸ் பறவை வடிவத்தில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை கடந்த மாதம் 27-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முதல்வர் பழனிசாமி திறந்து வைத்த அன்றில் இருந்து ஜெயலிலதா நினைவிடத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதல் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஜெயலலிதா நினைவிடம் அருகே, அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்கவும் தமிழக அரசு ரூ.12 கோடியும், நினைவிடத்தின் 5 ஆண்டு  பராமரிப்பு பணிக்கு ரூ.9 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்தது. இதில், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், அவரது வீடியோ மற்றும் ஆடியோ பேச்சின் பதிவு, அவர் படித்த நூல்கள், அவரது சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் வைக்கப்படுகிறது. இதில், ஜெயலலிதா பேசுவது போன்று தொடு திரை மூலம் ஒளி, ஒலி காட்சிகள் வைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம், அறிவுசார் மையம் முழுக்க, முழுக்க ஏசி வசதி செய்யப்படுகிறது. தற்போது இந்த பணிகள் முடிவடையாமல் உள்ளது.

இந்நிலையில், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா இறுதிக்கட்ட பணி நடைபெறுவதால் மறைந்த தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது. இருப்பினும்,  சிறையில் இருந்து வெளியே வந்து பெங்களூருவில் தங்கியுள்ள சசிகலா வரும் 7-ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, சசிகலா ஜெயலலிதா நினைவிடம் செல்வதை தடுக்கும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: