மேற்கு வங்க முதல்வருக்கு எதிரான அலை மாநிலத்தில் உள்ளது: மருமகனை முதல்வராக்க மம்தா திட்டம்: அமித் ஷா குற்றச்சாட்டு

கொல்கத்தா: தனது மருமகன் அபிஷேக் பானர்ஜியை மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக அமரவைக்க மம்தா பானர்ஜி திட்டங்களை வகுத்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். மேற்குவங்க பேரவை தேர்தல் களம்  சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இதனால், முதல்வர் மம்தா தலைமையிலான ஆளுங்கட்சி ஆட்டம்கண்டு வருகிறது.

இந்நிலையில் ஹவுரா மாவட்டத்தில் நடந்த பேரணியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசுகையில், ‘மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது மருமகனின் நலனுக்காக மட்டுமே  பணியாற்றுகிறார். சட்டப் பேரவை தேர்தல் வரை அவருடன் யாரும் இருக்க மாட்டார்கள். அவரது மருமகனை (எம்பி அபிஷேக் பானர்ஜி) மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக அமரவைக்க மம்தா திட்டங்களை வகுத்து வருகிறார்.

இத்திட்டம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டங்களின் ஒன்றாக உள்ளது. திரிணாமுல் காங்கிரசில் இருந்து பலர் விலகி வருவதால், அவருக்கு எதிரான அலை மாநிலத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான  ஆட்சி, முந்தைய இடதுசாரி ஆட்சியைக் காட்டிலும் மோசமாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியமைத்தபோது, ‘தாய், தாய்மண், மக்கள்’ என்ற முழக்கத்துடன் மாநிலத்தை மாற்றிக் காட்டுவதாக உறுதியளித்தார். ஆனால், ‘மிரட்டிப்  பணம் பறிப்பது, ஊழலில் ஈடுபடுவது, குறிப்பிட்ட சில பிரிவினரை திருப்திப்படுத்துவது’ என்று ஆகிவிட்டது’ என்று பேசினார்.

Related Stories: