சேதுபாவாசத்திரம் அருகே உயர் கோபுர மின்விளக்கு கோளாறு; பூக்கொல்லை கடைவீதி இருண்டது: பொதுமக்கள் கடும் அவதி

சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் அருகே பூக்கொல்லை கடைவீதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கோளாறு ஆனதால் அப்பகுதி இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள பூக்கொல்லை கடைவீதியில், நாடாகாடு செல்லும் பாதையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பல லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. ஓரிரு ஆண்டுகள் பயன்பாட்டிலிருந்த இந்த உயர்கோபுர மின்விளக்குகள் கஜா புயல் பாதிப்புக்கு பிறகு செயல்படவில்லை. இருள் சூழ்ந்து கிடப்பதால் பொதுமக்கள் கடைவீதிக்கு வந்து செல்ல அச்சப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி வியாபாரிகள் கூறியதாவது,

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பூக்கொல்லையில் தான் உள்ளது. நூற்றுக்கணக்கான கடைகளும், முக்கிய நான்கு வீதி சந்திப்பான இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கிருந்த உயர்கோபுர மின்விளக்கு இரண்டு ஆண்டுகளாக செயல்படாததால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி இருண்டு கிடக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அருகிலேயே மதுக்கடையும் உள்ளது. வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பெண்கள், பள்ளி, கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பழுதுநீக்கம் செய்வதற்காக, உயரத்தில் இருந்த மின்விளக்குகளை அகற்றி எடுத்து சென்றனர். ஆனால் இதுவரை சீர் செய்யப்படாமல் உள்ளது. மின்விளக்கு பொருத்தும் ஹோல்டர் பாதியில் தொங்குகிறது. உடனடியாக பழுது நீக்கி, மீண்டும் உயர்கோபுர மின்விளக்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, இருளடைந்து காணப்படும், பூக்கொல்லை கடைவீதியை வெளிச்சத்தில் ஒளிரச் செய்வார்களா?

Related Stories: